காரைக்குடியில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக தேசியதலைவர் ஜேபி நட்டா, கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாத கட்சி திமுக என்றும், தமிழ்நாட்டில் படித்த தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா. அவர் பேசுகையில், “ராமநாதபுரம் சுவாமிகளின் அருளை பெற்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன். பாரம்பரியமிக்க திருவள்ளுவர் பிறந்த தமிழக பூமிக்கு வருவதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். மோடி கூட்டாட்சியை விரும்பக்கூடியவர், தமிழ்நாட்டின் மீது மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார், அதனால், தமிழக வளர்ச்சிக்கு அதிக நிதிகளை ஒதுக்கி தந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இளைஞர்கள் மற்றும் ஏராளமான பெண்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் அனைவரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்” என்று கூறினார்.
மேலும், திமுக குறித்து பேசிய அவர், ”திமுக கலாச்சாரமே லஞ்சம் தான். திமுக என்றாலே பண விநியோகம், வாரிசு அரசியல், கட்டப்பஞ்சாயத்து என்பதுதான். தொடர்ந்து மோடியின் ஆட்சியில் நாடு மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
”இந்திய அளவில் பிஜேபி கட்சி சமுதாயத்திற்கு பல வெற்றிகளையும் சாதகங்களையும் கொண்டுள்ள கட்சியாகவும், நாட்டின் மிகவும் முக்கிய கட்சியாகவும் இருந்து வருகிறோம், தமிழ்நாட்டு மக்களின் மீதுள்ள அன்பின் காரணமாக அதன் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம், நேற்று எய்ம்ஸ் தொடர்பான சில வீடியோக்களை பார்த்தேன். அதுபற்றி முழுமையான கருத்துக்களை அண்ணாமலை உங்களிடம் கூறுவார், தயவுசெய்து படித்த தலைவர்களை தேர்ந்தெடுங்கள்” என்றும் அறிவுரை கூறினார்.
”நேற்று நான் கூறினேன் 164 கோடி பணம் மேலும் எய்ம்ஸ் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அது பற்றி முதலில் படித்திருக்க வேண்டும், இதற்காகத்தான் கூறுகிறேன் தமிழ்நாட்டில் படித்த தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நான் என்ன கூற வருகிறேன் என்று தெரிந்து கொள்வார்கள்” என்றும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM