திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்துகளின் கண்ணாடியை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், திருவாரூர் பணிமனைக்குச் சொந்தமான 2 பேருந்துகளும், மயிலாடுதுறை பணிமனைக்குச் சொந்தமான ஒரு பேருந்து என 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில், நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனிடையே பேருந்து நிலையத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார். தொடர்ந்து நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மக்கள் கூடியிருந்தபோது பேருந்து நிலையத்தினுள் புகுந்த மர்ம நபர்கள் அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM