`எந்தக் கடவுளை கும்பிட்டாலும் அதில் உண்மையா இருக்கிறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் ஆன்மிகம்’ எனப் புன்னகைக்கிறார் ஜானகி தேவி. வெள்ளித்திரை, சின்னத்திரை என நமக்குப் பரிச்சயமான முகம். சக்தி விகடன் விஐபி பூஜையறை பகுதிக்காக அவரை சந்தித்துப் பேசினோம்.
” எங்களுடைய குல தெய்வம் சுடலைமாட சுவாமி. மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமியை ரொம்பவே விரும்பிக் கும்பிட ஆரம்பிச்சிருக்கேன். அதே மாதிரி, வாராஹி அம்மனுடைய தீவிர பக்தையாக சமீபமா மாறியிருக்கேன். அவங்களை இஷ்டப்பட்டு, கடந்த நான்கு மாசமா கும்பிட்டுட்டு இருக்கேன்.. எனக்கு நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு!
நிறைய பேர் விரதம் இருக்கிறதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லுவாங்க. மூடநம்பிக்கையைத் தாண்டி இது என்னுடைய நம்பிக்கை. அதனால எனக்கு விரதம் இருக்கிற பழக்கம் உண்டு.
பஞ்சமி விரதம் இருந்து அபிஷேகம் எல்லாம் பண்ணிட்டு வாராஹிக்குப் பிடிச்ச மரவள்ளிக் கிழங்கு, ஆரவள்ளிக் கிழங்கு எல்லாம் வச்சிருசேன். அம்மனுக்கு மாதுளம்பழத்தில் தேன் ஊற்றி வச்சா ரொம்பப் பிடிக்கும். அதெல்லாம் வச்சு வழிபடுவேன். சுவாமி பால் குடிக்கிறாங்க, தண்ணீர் குடிக்கிறாங்கன்னுலாம் வீடியோவில் பார்த்திருக்கேன். அது என் லைஃப்ல என் கண்ணு முன்னாடியே நடந்திருக்கு. அதை நான் உணர்ந்திருக்கேன். அதுக்கு அப்புறத்துல இருந்து அம்மா மீது தீவிர பக்தையாகிட்டேன்.
ஒரு கடைத் திறப்பு விழாவிற்குப் போயிருந்தேன். அவங்க என்ன சாமிப்படம் வேணும்னு கேட்டிருந்தாங்க. என்னை அறியாமலேயே வாராஹி அம்மன் படம் வேணும்னு சொல்லிட்டேன். கடை திறப்பு விழா முடிஞ்சதும் அவங்க கிஃப்ட் கொடுத்தாங்க.. நானும் அதை வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். மறுநாள் ஷூட்டிங்கிற்கும் கிளம்பி போயிட்டேன். பிறகு வீட்டுக்கு வந்ததும் கிஃப்ட் ஓப்பன் பண்ணிப் பார்க்கலாம்னு பார்த்தா எங்க வீட்டுக்கு வாராஹி அம்மன் படம் வரல. அதுக்குப் பதிலா விநாயகர் படம்தான் வந்திருந்துச்சு. நாம கேட்டும் நமக்கு கிடைக்கலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
அன்னைக்கு பஞ்சமி. காலையிலேயே வாராஹி அம்மன் சிலையை நாம வாங்கி இன்னைக்குக் கும்பிடணும்னு தோணிட்டே இருந்துச்சு. என் அக்கவுண்ட்ல 2,000 ரூபாய்தான் மொத்தமே இருந்துச்சு. அந்த அம்மனுடைய சிலை 2,800 ரூபாய் என்பதால் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தேன். சரி இதைவிடச் சின்ன சிலை பார்க்கலாமான்னு தேடித்தேடி பார்த்துட்டே இருக்கேன். ஆனா, அதுல எனக்கு மனநிறைவு கிடைக்கல. அந்தக் கடையிலேயே சுற்றி வந்துட்டு இருக்கும்போதே என் சம்பளப் பணம் அக்கவுண்ட்ல கிரிடிட் ஆச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. அன்னைக்கு சிம்பிளா வீட்டுல அம்மன் சிலை வச்சு பூஜை பண்ணிட்டு இனிமே தொடர்ந்து பஞ்சமி, பஞ்சமி சாமி கும்பிடலாம்னு மட்டும் நினைச்சிக்கிட்டேன்.
இரண்டாவது பஞ்சமியப்ப ஷூட்டிங்கெல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரவே நேரம் ஆகிடுச்சு. வந்து எல்லாம் செட் பண்ணி நைட் 12.30 மணிக்கு மேலதான் பூஜையை ஆரம்பிச்சேன். என்னுடைய கணவரும், பாப்பாவும் ரூமில் இருந்தாங்க. நான் மட்டும் ஹாலில் பூஜை பண்ணிட்டு இருந்தேன். பாப்பா திடீர்னு ஏதோ எடுக்கிறதுக்காக ஹாலுக்கு வந்தா. அப்ப நான் அவளைக் கூப்பிட்டு பாப்பா இங்க வந்து சாமிக்கு இந்தப் பாலைக் கொடுன்னு சொன்னேன். அவ ஸ்பூன்ல எடுத்துக்கொடுத்தா. அப்படிக் கொடுத்ததும் எப்படி ஒரு குழந்தை பால் உறிஞ்சிக் குடிக்குமோ அப்படியே குடிச்சாங்க. எனக்குக் கண்ணீரே வந்துடுச்சு. என் பாப்பா பயந்துட்டா. அதுக்கப்புறம் இனிமே எனக்கு இவங்கதான் அப்படின்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. தொடர்ந்து அவங்களை கும்பிட ஆரம்பிச்சிருக்கேன்.
பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் எப்பவும் எலுமிச்சைதான் பிரசாதமா கொடுப்பாங்க. அன்னைக்கு என் கையில நெல்லிக்காய் கொடுத்திருக்காங்க. நான் அது எலுமிச்சைன்னு ரொம்ப நேரமா நினைச்சிட்டு இருந்தேன். சுற்றி வரும்போது என் கையைப் பார்த்தேன். அப்பதான் அது நெல்லின்னே தெரிஞ்சது. என்னடா இது எனக்கு நெல்லிக்காய் வந்திருக்குன்னு சொல்லவும் என் பின்னாடி யாருன்னே தெரியாத ஒரு நபர். `உனக்கு நெல்லிக்காய் வந்திருக்கு… இனிமே உனக்கு யோகம் தான்மா!’ன்னு சொன்னார். அதுக்கப்புறமாகத்தான் எனக்கொரு கம்பேக் கிடைச்சு நடிக்கவே ஆரம்பிச்சேன்.
எப்பவும் மனசார ஒரு விஷயத்தை வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் நமக்கு நடக்கும். அப்படி என் வாழ்க்கையில் நிறையவே நடந்திருக்கு. அதனாலதான் இதெல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ஜானகிதேவி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!