“நமக்குக் கிடைக்காத சாப்பாடு நம்ம மக்களுக்குக் கிடைக்கணும்னு சூரி நினைச்சார்; ஆனா!"-சூரி உறவினர்கள்

நடிகர் சூரி மதுரையில் `அம்மன் உணவகம்’ என்கிற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டியை வசூலிக்காமல் உணவை விற்றதாக வணிகவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால் சூரி தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது. ரெய்டின் முடிவில் மூன்று நாட்களில் அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதோடு, விடுபட்ட ஆவணங்களையும் காட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ‘ரெய்டில் என்னதான் நடந்தது? என்று சூரிக்கு நெருக்கமானவரிடம் பேசினோம்.

“அம்மன் உணவகத்திற்கு மொத்தம் 9 கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளுக்கும் தனித்தனி ஜி.எஸ்.டி நம்பர்கள் உள்ளன. ஆனால், ஒரு ஜி.எஸ்.டி நம்பரை வைத்து அனைத்து ஹோட்டல்களையும் நடத்துவதாகவும், ஜி.எஸ்.டிக்கு என்று தனியாக பில் போடுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டி வணிகவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

`எங்கள் ஹோட்டல் அசோசியேஷன் பில்லில் ஜி.எஸ்.டியை சேர்ப்பதில்லை. ஜி.எஸ்.டிக்கு என்று தனியாக வரி வசூலிப்பதில்லை. நாங்களே 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை செலுத்துகிறோம். கார்ப்பரேட் போல் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சூரி அண்ணன் இந்த ஹோட்டலை நடத்தவில்லை’ என்று அதிகாரிகளிடம் கூறினோம். அதோடு, எங்கள் அத்தனை ஓட்டல் கிளைகளுக்குமான ஜி.எஸ்.டி நம்பரையும் எடுத்துக் காண்பித்தோம். `இனிமேல் பில் போடும்போது ஜி.எஸ்.டியை தனியாக வசூலியுங்கள். அம்மன் ஹோட்டல் போர்டிலும் ஜி.எஸ்.டி நம்பரை எழுதுங்கள்’ என்றார்கள். அவர்களுக்கு ஆதாரங்களைக் காட்டியதோடு, அவர்கள் செய்யச்சொன்ன வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டோம்.

`நமக்கு சாப்பாடு கிடைக்காத ஊரில், மக்களுக்கு நல்ல உணவு கொடுக்கவேண்டும்’ என்ற நோக்கத்தில்தான், சூரி அண்ணன் இந்த ஹோட்டலை ஆரம்பித்தார். பணம் இல்லாமல் வருபவர்களுக்கு சில நேரங்களில் இலவசமாகவும் சாப்பாடு கொடுக்கிறோம். தினந்தோறும் மீதமாகிற உணவுகள் தெப்பக்குளத்துப் பகுதி மக்களுக்குச் செல்கிறது. இதையெல்லாம் பப்ளிசிட்டி செய்வதில்லை.

சூரி

இன்னும் சொல்லப்போனால், மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் அம்மன் ஹோட்டலை நடத்துவதால் தினமும் 25,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அண்ணன் கைக்காசைப் போட்டுத்தான் நடத்தி வருகிறார். ஒரு கிலோ இட்லி அரிசியே 45 ரூபாய்க்கு வாங்குகிறோம். 4 இட்லி 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம். சில ஹோட்டல்களில் இட்லியை கம்மி ரேட்டுக்குக் கொடுத்துவிட்டு, சாம்பாரை கடலைப்பருப்பில் செய்வார்கள். இங்கு அப்படியல்ல. துவரம் பருப்பில்தான் சாம்பார். அனைத்து அம்மன் ஹோட்டலுக்கும் சென்ட்ரல் கிச்சனில் சமைத்துதான் மீல்ஸ் எடுத்துச் செல்லப்படுகிறது. ஜி.ஹெச்சுக்குன்னு தனியாக சமையல் செய்வதில்லை. மற்ற அம்மன் ஹோட்டல்களில் என்ன சுவையில், என்ன தரத்தில் கொடுக்கிறோமோ, அதையேதான் ஜி.ஹெச்சிலும் கொடுக்கிறோம். 130 ரூபாய் மீல்ஸை ஜி.ஹெச்சில் 60 ரூபாய்க்கு தருகிறோம். ஒரு லெமன் சாதம் 30 ரூபாய். இப்படி அனைத்தும் மிகக் குறைந்த விலைதான்.

சூரி அண்ணனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 600 தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். ஊழியர்களின் திருமணத் தேவைகள், மருத்துவச் செலவுகள், ஸ்கூல் ஃபீஸ் என அனைத்தையும் செய்கிறார். வணிகவரித்துறை அதிகாரிகள் எதையும் விசாரிக்காமல் வந்துவிட்டார்கள். அதேபோல, நாங்கள் ஜி.எஸ்.டிக்கு பணம் செலுத்தாமல் பொருட்களை வாங்குவதாகவும் சொல்கிறார்கள். இதுவும் தவறானதுதான். ஏனென்றால், நாங்கள் கடைகளில் வாங்குவதில்லை. மொத்தமாக விவசாயிகளிடமே அரிசி, காய்கறிகள், அப்பளம் போன்றவற்றை வாங்கிக்கொள்கிறோம். விவசாயிகளிடமே நேரடியாக வாங்கும்போது ஜி.எஸ்.டி கிடையாது. உண்மையில் பிசினஸ் ஆரம்பிக்கவேண்டுமென்றால், அண்ணன் வேறு தொழில்களை செய்திருக்கலாம். நம்ம பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும்னுதான் ஜி.ஹெச்ல குறைந்த விலைக்கு சாப்பாடு போடுறார். இதெல்லாம் தெரியாமல் அதிகாரிங்க வந்துட்டாங்க” என்றார்கள், சூரிக்கு நெருக்கமானவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.