நியூயார்க் :”பிரதமர் மோடி நள்ளிரவில் கண் விழித்து எனக்கு போன் செய்து இந்திய துாதரகம் தாக்கப்பட்டது குறித்து விசாரித்தார்,” என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து பேசினார்.ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின்ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குசென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:கடந்த, 2016ல் ஆப்கானிஸ்தானின் மசார் – -இ- – ஷெரீப் நகரில் உள்ள இந்திய துாதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது நான் வெளியுறவுத் துறை செயலராக இருந்தேன். துாதரகம் தாக்கப்பட்டது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் நம் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது நள்ளிரவு 12:30 மணிக்கு என் டெலிபோன் ஒலித்தது.எடுத்துப் பேசினால், எதிர்முனையில் பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்னும் விழித்திருக்கிறீர்களா’ என கேட்டார்.நான், ஆப்கானிஸ்தானில் நம் துாதரகம் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். பின், துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்தும் பேசிய பிரதமர், ‘இந்த விஷயம் முடிந்தவுடன் தகவல் சொல்லவும்’ என்றார்.நான், நடவடிக்கைகள் முடிய இன்னும் மூன்று மணி நேரமாவது ஆகும்; முடிந்தவுடன் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றேன்.’
என் எண்ணுக்கும் அழைத்து உடனே தகவல் தெரிவிக்கவும்; நான் விழித்திருப்பேன்’ என்றார்.பிரதமர் நாட்டின் மீதும், அதிகாரிகள் மீதும் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என நான் வியந்தேன். அதேபோல், கொரோனா பரவல் காலகட்டத்திலும் மற்ற நாட்டு தலைவர்களைக் காட்டிலும் மிகுந்த அக்கறையுடனும், சுறுசுறுப்புடனும் பிரதமர் செயல்பட்டார்.அதனால் தான் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement