ஆட்சி மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒரு பகிரங்க புகாரை வைத்துள்ளார். படிக்காதவர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள்.. இவர்கள் ஆட்சி பீடத்தில் உள்ளனர் என்று நட்டா கூறியுள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடிக்கு வந்திருந்த ஜே.பி. நட்டா அங்கு பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுக ஆட்சி மீது கடுமையான புகார்களை அவர் வைத்தார். நீட், தேசிய கல்விக் கொள்கை என எல்லாவற்றுக்கும் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. படிக்காதவர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்று அவர் கடுமையாக சாடினார். கல்வி அறிவு இல்லாதவர்கள் கல்வி குறித்துப் பேசுகிறார்கள் என்றும் அவர் சாடியிருந்தார்.
நட்டாவின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது. திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் கூறுகையில், பாஜக அளவுக்கு தரம் இறங்கிப் போக திமுக தயாராக இல்லை. படிப்பறிவில்லாத தலைவர்கள் ஆட்சியில் இருப்பதால்தான் நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கைய எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார். அந்தக் கேள்வியை நட்டாவுக்கே நாங்கள் திருப்பி விடுகிறோம். பாஜக தலைவர்களின் தகுதி என்ன.. ?
வாரிசு அரசியல் குறித்து நட்டா பேசுகிறார். அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.. எத்தனை சதம் போட்டுள்ளார்.. எத்தனை சிக்ஸர்கள் விளாசியுள்ளர்.. எத்தனை யார்க்கர்கள் வீசியுள்ளார்.. அவர் ஏன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அது வாரிசு அரசியல் இல்லையா.. அதை நெப்போட்டிசம் என்று சொல்ல முடியாதா.. அதைப் பார்த்து பாஜக ஏன் கண்களை மூடிக் கொள்கிறது. வாரிசு அரசியல் பற்றிப் பேசுவது பாஜகவுக்கே வேடிக்கையாக இல்லையா என்று கேட்டார் சரவணன்.
உண்மை நிலவரம் என்ன?
படிப்பறிவில்லாதவர்கள் அதாவது Uneducated தலைவர்கள் என்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக தலைவர்களை ஜே.பி. நட்டா சொல்லியுள்ளது எந்த அளவுக்கு உண்மை.. அதுகுறித்துப் பார்ப்போம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அவரது அமைச்சரவையில் உள்ளோரின் கல்வித் தகுதியைப் பார்த்தாலே அதற்கான விடை கிடைத்து விடும்.
இதோ அந்தப் பட்டியல்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் – பி.ஏ. வரலாறு.
துரைமுருகன் – எம் ஏ., பி.எல்.
கே.என். நேரு – பள்ளிப் படிப்பு
ஐ.பெரியசாமி – பிஏ பிஜிஎல்
கே.பொன்முடி – பிஏ, பிஎல், 3 எம்ஏ மற்றும் ஒரு பிஎச்டி.
எ.வ. வேலு – எம்ஏ
எம்ஆர்கே பன்னீர் செல்வம் – பிஎல்.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – எஸ்எஸ்எல்சி
எஸ் ரகுபதி பிஎஸ்சி – பிஎல்
தங்கம் தென்னரசு – பிஇ.
எஸ் முத்துச்சாமி – எம்ஏ
பெரியகருப்பன் – பிகாம் பிஎல்
தாமோ அன்பரசன் – பியூசி
மு.பெ.சாமிநாதன் – பிஏ
கீதாஜீவன் – எம்காம்
அனிதா ராதாகிருஷ்ணன் – எஸ்எஸ்எல்சி
சிவசங்கர் – பிஇ
கே. ராமச்சந்திரன் – பியூசி
சக்கரபாணி – பிஏ
செந்தில் பாலாஜி – பிகாம்
ஆர்.காந்தி – எஸ்எஸ்எல்சி
மா.சுப்ரமணியன் – பிஎல்
பி.மூர்த்தி – பிளஸ் டூ
சா.மு. நாசர் – எஸ்எஸ்எல்சி
ராஜ கண்ணப்பன் – எஸ்எஸ்எல்சி
பி.கே. சேகர்பாபு – எஸ்எஸ்எல்சி
பழனிவேல் தியாகராஜன் – பிஎச்டி, எம்பிஏ
கே.எஸ். மஸ்தான்- 8வது
அன்பில்மகேஷ் – எம்சிஏ
மெய்யநாதன் – எம்சிஏ
சிவி கணேசன் – எம்ஏ பிஎட்
மதிவேந்தன் – எம்பிபிஎஸ்.
மனோ தங்கராஜ் – எம்ஏ
கயல்விழி செல்வராஜ் – எம்ஏ பிஎட்
மொத்தம் உள்ள 34 அமைச்சர்களில் 9 பேர் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். மற்றவர்கள் பட்டதாரிகள். பள்ளிப் படிப்பை கூட படிக்காதோர் என்று யாருமே இந்தப் பட்டியலில் இல்லை. படிப்பறிவில்லாதவர்கள் என்றால் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் டிக்ஷனரியில் போட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தாலும் கூட இந்த அமைச்சரவையில் யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. எனவே ஜே. பி. நட்டா சொல்வதா படிப்பறிவில்லாதவர்கள் என்று திமுக அமைச்சர்களை கூற முடியுமா என்று தெரியவில்லை.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி
ஜே.பி. நட்டா பேச்சு குறித்து தமிழக நிதியமைச்சரும், பாஜகவினருக்கு பெரும் வைரியாக இருப்பவருமான பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு டிவீட் மூலம் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், 2 நாடுகளில் 3 பல்கலைக்கழகங்களில் 4 பட்டப் படிப்பை முடித்துள்ளேன். இதற்காக பல்வேறு சர்வதேச தேர்வுகளையும் எழுதியுள்ளேன். இத்தனை செய்தும் ஜே.பி. நட்டா வைத்துள்ள “educated” என்ற தகுதியை என்னால் பெற முடியாமல் போயுள்ளது வருத்தமாக இருக்கிறது.
ஒரு வேளை இத்தனை படிப்புகளையும் படித்ததற்குப் பதில் “Entire Political Science” பட்டப் படிப்பை முடித்திருந்தால் ஜே. பி. நட்டா சொன்னது போல நானும் படிப்பறிவுள்ளவானாக மாறியிருப்பேனோ என்னவோ என்று நக்கலடித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏக்கள்
சரி ஒட்டுமொத்த திமுக எம்எல்ஏக்கள் என்று எடுத்துக் கொண்டு பார்த்தாலும் கூட அதிலும் படிப்பறிவில்லாதவர்கள் யாருமே கிடையாது. மொத்த திமுக எம்எல்ஏக்களில் 37.60 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பை தொட்டவர்கள் அல்லது முடித்தவர்கள். 23.20 சதவீதம் பேர் தொழிற் பட்டப்படிப்பை முடித்தவர்கள். 22.40 சதவீதம் பேர் முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்கள். 12.80 சதவீதம் பேர் பட்டதாரிகள். பிஎச்டி அல்லது டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 3.20 சதவீதம் பேர்.
இதுதான் கள நிலவரமாக இருக்கிறது. எனவே படிப்பறிவில்லாதவர்கள் என்று எந்த பொருளில் ஜே.பி. நட்டா கூறினார் என்பது புரியவில்லை. இதை பாஜகவினர்தான் விளக்க வேண்டும்.