ராமேஸ்வரத்தில் பாரம்பரிய முறைப்படி தெர்மோகோல் மிதவை மூலம் குடும்பங்களின் பசியை போக்க உயிரை பணையம் வைத்து மீன்பிடியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விசைப்படகுகள் கடற்கரையோரம் மீன் பிடிப்பில் ஈடுப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு உதவி செய்து பாதுகாப்பான முறையில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா, சங்குமால், சேராங்கோட்டை, தனுஷ்கோடி, வடகாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான தெர்மோகோல் மிதவை மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து அதிகாலை 3 மணி அளவில் மீனவர்கள் தங்களுக்குரிய தெர்மோகோல் மிதவையை கையில் எடுத்துக்கொண்டு நாட்டு படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்று அங்கு நடுக்கடலில் மிதவைகளை மிதக்க வைத்து அதன் மீது மீனவர்கள் அமர்ந்து தூண்டில் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
பாரம்பரிய மீன்பிடி முறையான தெர்மோகோல் மிதவையுடன் மீனவர்களை ஏற்றி செல்வதற்கு ஒரு நபருக்கு நாட்டுப்படகுகளில் 100 ரூபாய் கொடுக்கப்படுவதாகவும், அப்படி நூறு ரூபாய் கொடுத்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மட்டுமே கிடைப்பதாகவும், மேலும் இந்த தொழில் லாட்டரி சீட்டு போல் ஒரு நாளைக்கு அதிகப்படியான மீன்கள் கிடைத்தால் அதற்கேற்றார் போல பணம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நடுக்கடலில் கடல் அலைகளின் மத்தியில் தெர்மோகோல் மிதவையை வைத்து தங்களுடைய கைகள் செயலிழக்கும் வகையில் பயணம் செய்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தங்களது உயிர்களை பணையம் வைத்து குடும்பங்களின் பசியை போக்குவதற்காகவே இந்த பாரம்பரிய மீன்பிடி தொழிலை கைவிட முடியாமல் ஈடுபட்டு வருவதாகவும், பிடித்து வருகின்ற மீன்களை கடற்கரை ஓரத்தில் வியாபாரிகளிடம் விற்று அதன் மூலம் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தை வைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்தி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விசைப்படகு மீனவர்கள் ஐந்து கல் மைல் தொலைவிற்கு அப்பால் சென்றுதான் மீன்பிடிக்க வேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பற்ற முறையில் தங்களுடைய குடும்பங்களின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு தெர்மோகோல் மிதவை வைத்து மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு, அரசு மானிய முறையில் நாட்டுப்படகு வழங்கி பாதுகாப்பான முறையில் மீன்பிடி தொழில்செய்ய உதவ வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
