பர்கூரில் கழிவறையை பெருக்கிய மாணவர்கள் – நடிக்க வைத்த ஆசிரியர் இடைநீக்கம்

பர்கூர் அரசு பள்ளி கழிவறை

BBC

பர்கூர் அரசு பள்ளி கழிவறை

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியை அடுத்த பர்கூரில் உள்ள கழிவறைகளை பெருக்க வைத்த சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் 284 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு காணொளி பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ், தலைமை ஆசிரியருக்கு அவப்பெயரை ஏற்படுத்த இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

காணொளி பதிவு செய்யப்பட்ட நாளில், பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை அழைத்து கழிவறையை சுத்தம் செய்வது போல துடைப்பத்தால் பெருக்கும்படி ஆசிரியர் அனுமத்துராஜ் கூறியிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் பெருக்கும் காட்சியை தமது செல்போனில் அனுமுத்துராஜ் பதிவு செய்தார். அந்த காணொளி சில வாட்ஸ் அப் குழுக்களில் பரவலாக பரவி வந்தது.

இந்த விடியோ குறித்த விசாரணையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்திமதிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த செயலில் அனுமுத்துராஜ் ஈடுபட்டதாக தெரிய வந்தது.



இது குறித்து மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை கொடுத்த நேரடி விசாரணையின் அடிப்படையில், ஆசிரியர் அனுமுத்துராஜை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ், தவறான செயலில் ஈடுபட்டு பள்ளிக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.

நடவடிக்கைக்கு உள்ளான அனுமுத்துராஜ், திருப்பத்தூர் மாவட்டம் மண்டல நாயனகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக உடன் பணிபுரியும் ஆசிரியர், மாணவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பிய விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


https://www.youtube.com/watch?v=jGfM1PY1B1U

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.