டோக்கியோ,
பான் பசிபிக் ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 20-வது இடத்தில் இருப்பவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 3-6, 4-6 என்ற நேர்செட்டில் 46-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவுக்கு எதிராக களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) உடல் நலம் பாதிப்பு காரணமாக விலகினார்.
இதனால் ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறினார். ரஷிய வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மேடோவா, லுட்மிலா சாம்சோனோவா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
இதே போல் கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மா ரடுகானு (இங்கிலாந்து) 6-3, 7-5 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் யானினா விக்மேயரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), மாக்டா லினெட்டி (போலந்து), லுலு சன் (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோரும் கால்இறுதியை எட்டினர்.