இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனையை நேற்று நள்ளிரவு முதல் என்.ஐ.ஏ மேற்கொண்டுவருகிறது. இந்தச் சோதனைகளில், அமலாக்கத் துறையினரும், உள்ளூர் போலீஸாரும் கூடுதலாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உட்பட 13 மாநிலங்களில் நடைபெற்றுவரும் இந்தச் சோதனைகள், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கரவாத நடவடிக்கைகள், பயிற்சி முகாம்களை நடத்துதல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் மக்களைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்தல் போன்ற குற்றசாட்டுகள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது சொல்லப்படுகின்றன. இதைத் தொடர்ந்தே, என்.ஐ.ஏ சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகள் வலுவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை ஒன்றாக இணைத்து, கேரளாவில் தேசிய ஜனநாயக முன்னணி, தமிழ்நாட்டில் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவில் ஃபோரம் ஃபார் டிக்னிட்டி (Forum for Dignity) என்ற அமைப்புகள் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த மூன்று அமைப்புகளும் ஒன்று சேர்ந்தன. அதைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் ‘எம்பவர் இந்தியா’ என்ற மாநாடு நடைபெற்றது. அப்போது, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
‘சிமி’ என்ற அமைப்பு தடைசெய்யப்பட்ட பிறகு, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினர், தலித், விளிம்பு நிலை சமூகங்கங்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான அமைப்பு இது என்றுஅறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பானது, காங்கிரஸ் கட்சியையும், பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சிக்கிறது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியையும் விமர்சிக்கிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் மோதல் போக்கை இந்த அமைப்பு கடைப்பிடித்துவருகிறது.
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, தேர்தலில் போட்டியிடுவதில்லை. முஸ்லிம்கள் மத்தியில் சமூகம் மற்றும் இஸ்லாமிய மார்க்க ரீதியிலான பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி போன்ற அமைப்புகளைப் போலவே இந்த அமைப்பும் செயல்படுகிறது என்ற சொல்கிறார்கள். இந்த அமைப்பானது, அதன் உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக வைத்துக்கொள்வதில்லை. அதுதொடர்பான ஆவணங்கள் எதுவும் இந்த அமைப்பிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
சமீபகாலத்தில், ஒரே நேரத்தில் இத்தனை மாநிலங்களில் சோதனைகள் நடைபெறுவது இதுவே முதன்முறை என்கிறார்கள். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில், அதிகமான கைது கேரளாவில் நடந்திருக்கிறது.
இந்த அமைப்பின் தலைவரான சலாம் உட்பட நான்கு முக்கிய நிர்வாகிகள் விசாரணைக்காகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில், இந்த அமைப்பின் கேரளா மாநிலத் தலைவர் சி.பி.முகமது பசீர், தேசியச் செயலாளர் வி.பி.நசருதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் பி.கோயா ஆகியோர் முக்கியமானவர்கள். கேரளாவில் மலப்புரத்தில் இருக்கும் சலாம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவில் 22 பேரும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 20 பேரும், தமிழ்நாட்டில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாம், உ.பி. ஆந்திரா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மங்களூருவில் உள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றருக்கிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. சென்னையிலும் மதுரையிலும் பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
என்.ஐ.ஏ சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது. “எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
என்.ஐ.ஏ சோதனைகள் நடைபெறும் சூழலில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ-வின் இயக்குநர் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து விவாதித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அடுத்து என்ன என்பது போக போக தெரிந்துவிடும்!