பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ‘தேசிய பேரவை’க்கு பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (23) முன்வைத்தார்.
அத்துடன், திருத்தத்தை முன்வைத்த ஆளும் கட்சியின் முதற்கோலாசான் குறிப்பிடுகையில், சபாநாயரைத் தவிசாளராகக் கொண்டு, பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் (35) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டதாக “தேசிய பேரவை” அமையும் எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பேரவையில் உள்ளடக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் வருமாறு,
டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், டிரான் அலஸ், சிசிற ஜயகொடி, சிவநேசதுறை சந்திரகாந்தன், ஜோன்ஸ்ரன் பர்னாந்து, ரவூப் ஹக்கீம், (திருமதி) பவித்திரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம்.அதாஉல்லா, (பேராசிரியர்) திஸ்ஸ விதாரன, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவங்ஸ , வாசுதேவ நாணயகார, பழனி திகாம்பரம், மனோ கணேசன், உதய கம்மன்பில, ரோஹித்த அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, ஜீவன் தொண்டமான், ஜீ.ஜீ.பொன்னம்பலம், (வண) அத்துரலிய ரதன தேரர், அசங்க நவரத்ன, அலி சப்ரி ரஹீம், சி.வி.விக்னேஸ்வரன், வீரசுமன வீரசிங்ஹ, சாகர காரியவசம் ஆகியோராகும்.
மேலும் சில உறுப்பினர்களின் பெயர்கள் கிடைக்கப் பெறவுள்ளதால் அவை எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களினால் 20.09.2022 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பேரவை குறித்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டது.
இதனைச் சமர்ப்பித்து உரையாற்றியிருந்த பிரதமர் குறிப்பிடுகையில், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதுல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது இதில் ஒன்றாகும் என்றார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய உடன்பாட்டிற்கு வருவது, அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியோர் விசேட கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது என்பனவும் இந்தப் பேரவையின் பொறுப்புகளாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய பேரவையானது துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளைக் கோருவதற்கான தத்துவங்களைக் கொண்டிருக்கும்.