“பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக, பாஜகவுக்கு நிதிஷ் குமார் துரோகம் செய்துள்ளார்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், அக்கூட்டணியை, கடந்த மாதம் முறித்துக் கொண்டார். பிறகு, பழையக் கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பீகார் மாநில முதலமைச்சராக, நிதிஷ் குமார் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார்.
இந்நிலையில், இந்த அதிரடி திருப்பங்களுக்கு பிறகு, முதன் முறையாக, பீகார் மாநிலத்திற்கு, பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். புர்னியா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நிதிஷ் குமாரால் சிறந்த நிர்வாகத்தை தர முடியுமா? பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார் மக்களையும், பாஜகவையும் அவர் ஏமாற்றி விட்டார். 2024 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ் குமார் கூட்டணி தோல்வி அடையும். பீகார் மாநிலத்தில் நிச்சயமாக, பாஜக ஆட்சி அமையும். கூட்டணியை மாற்றியதால், நிதிஷ் குமார் பிரதமராக முடியுமா? அரசியலில் நுழைந்தது முதல் பலரை ஏமாற்றி உள்ளார். நாளை, காங்கிரஸ் மடியில் அமர்ந்து கொண்டு உங்களையும் கழற்றி விடுவார் என்பதால் லாலு பிரசாத் யாதவ் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் நிதிஷ் குமார் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றார். 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரட்டும். லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ் குமார் கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள். அத்துடன் இருவரும் அரசியலை விட்டு விடுவார்கள். இங்கு 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
நிதிஷ் குமாருக்கு, பீகார் மக்கள் நீண்ட காலமாக சந்தேகத்தின் பலனை கொடுத்தனர். மீண்டும், ஆட்சிக்கு வர முடியாது என்பது நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு தெரியும். இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியின் தாமரை பீகார் மாநிலத்தில் மலரும். ஆட்சியில், லாலு கலந்து கொண்டதும், லாலு மடியில் அமர்ந்ததும் மாநிலத்தில் அச்சம் நிலவுகிறது. இந்த எல்லை மாவட்டங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். யாரும் பயப்பட தேவையில்லை. மத்தியில் மோடி ஆட்சி அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.