பிகார்: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ் குமார் கூட்டணி துடைத்தெறியப்படும் என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானதை அடுத்து, முதல் முறையாக அமித் ஷா பிஹாருக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பிஹார் வந்துள்ள அவர், முதல் நாளான இன்று புர்னியா நகரில் நடைபெற்ற ‘ஜன பாவன மகாசபா’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
“கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது நிதிஷ் குமார் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்ததாக, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில், லாலு – நிதிஷ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். பிஹார் மக்கள் இதனை நிகழ்த்திக் காட்டுவார்கள். அதற்கு அடுத்ததாக, 2025-ல் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இதுவரை சந்தேகத்தின் பலனை பிஹார் மக்கள் நிதிஷ் குமாருக்கு அளித்து வந்தனர். நீண்ட காலமாக இருந்து வந்த அந்த சந்தேகம் தற்போது தீர்ந்துவிட்டது. லாலுவின் கட்சியோ நிதிஷின் கட்சியோ இனி ஆட்சிக்கு வராது என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள். பிரதமர் மோடியின் தாமரையை அவர்கள் பிஹாரில் இம்முறை மலரச் செய்வார்கள்.
நிதிஷ் குமாருக்கு எந்த அரசியல் சித்தாந்தமும் கிடையாது. சோசியலிசத்தை கைவிட்டுவிட்டு லாலு பிரசாத்தோடு சேர்ந்துகொண்டு சாதிய அரசியலை மேற்கொள்வார்; இடதுசாரிகளோடும், காங்கிரசோடும் கைகோப்பார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவோடு இணைவார். அவரைப் பொறுத்தவரை பதவிதான் முக்கியம்.
மாட்டுத் தீவனம் ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் தற்போது அமைச்சர்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு எதிரான சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும் என்ற லாலு பிரசாத்தின் அழுத்தத்திற்கு முதல்வர் நிதிஷ் குமார் அடிபணியத் தொடங்கிவிட்டார். பிஹாரில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிட்டது. இந்த காட்டாட்சிக்கு பாஜக முடிவு கட்டும்” என்று அமித் ஷா பேசினார்.