பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
 
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
 
• நெருக்கடியில் இருந்து இலங்கைக்கு மீள முடியும் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நம்பிக்கை!
 
பரிஸ் க்ளப் (Paris Club) மற்றும் பரிஸ் க்ளப்பில் அங்கத்துவம் அல்லாத 23 நாடுகளின் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இலங்கை நிச்சயம் இப்பிரச்சினையிலிருந்து மீண்டெழும் என்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தேவையான அனைத்து அர்ப்பணிப்புக்களை செய்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது வெளிநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இதன்போது விளக்கமளித்தனர்.
 
இதனையடுத்து, வெளிவிவகார தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்காக தற்போதைய நெருக்கடியை , வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனும், சமத்துவத்துடனும் பணியாற்றும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தாரக்க பாலசூரிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்தன உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
22-09-2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.