ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வட கொரியா விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் நாடு மீது, ரஷ்யா தொடுத்துள்ள போர், சுமார் 7 மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்தப் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான போர், உலக அரங்கில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்ட பிறகும் கூட, போரை நிறுத்த ரஷ்யா உடன்படவில்லை.
இதற்கிடையே உக்ரைன் மீது தாக்குதல் நடத்த, ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால், கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவிடம், ரஷ்யா அணு ஆயுதங்களை வாங்கி உள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இந்தத் தகவலை, ரஷ்ய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா..! – ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்கா..!
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வட கொரிய அதிகாரிகள் கூறியதாவது:
பிற விரோத சக்திகள், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே ஆயுத ஒப்பந்தங்கள் பற்றிய வதந்தியை பரப்புகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை நாங்கள் எச்சரிக்கிறோம். பொய்களை பேசும் அமெரிக்கா தனது வாயை தயவு செய்து மூட வேண்டும். ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை வினியோகிக்கும் திட்டமும் இல்லை. ஏற்றுமதி செய்யும் திட்டமில்லை. அமெரிக்கா வீண் வதந்தியை பரப்புகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா – வட கொரியா இரு நாடுகள் நட்புறவு நாடுகளாயின. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.