புதுடெல்லி: உத்தர பிரதேச மதரஸாக்களை அடுத்து முஸ்லிம் வக்பு வாரியங்களின் சொத்துக்கள் குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தரம்பால் கூறும்போது, ‘‘உ.பி.யில் வக்பு வாரிய சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. அதை கண்டுபிடித்து சொத்துகளை காக்கும் பொருட்டு சன்னி மற்றும் ஷியா ஆகிய 2 வக்புகளின் சொத்துகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
மாநில சிறுபான்மை நலத்துறை துணை செயலர் ஷகீல் அகமது சித்திக்கீ பெயரில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ‘‘கடந்த ஏப்ரல் 7, 1989-ல் காங்கிரஸ் முதல்வராக இருந்த என்.டி.திவாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முஸ்லிம்களின் இடுகாடுகள், தர்காக்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றை வக்பு வாரியங்களுக்கு மாற்றுவதாக முதல்வர் திவாரி உத்தரவிட்டிருந்தார். அவற்றை வக்புகளிடம் இருந்து திரும்ப பெற்று, மாநில அரசின் பொது சொத்தாக பதிவுசெய்யப்பட உள்ளது. எனவே, ஆய்வில் ஏப்ரல் 7, 1989 முதல் வக்பிடம் உள்ள சொத்துகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துகளும் பதிவிடப்பட உள்ளன’’ என்றார்.
இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் கூறும்போது, ‘‘வக்பு வாரிய சொத்துகள் ஆய்வு என்ற பெயரில் பாஜக அரசு மாநிலத்தில் இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே மோதலை உருவாக்க முயல்கிறது. இது தேர்தலில் வாக்குகள் பெறும் அரசியலே தவிர வேறு ஒன்றுமில்லை’’ என்றார்.
ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசதுதீன் ஒவைசி கூறும்போது, ‘‘மதரஸாக்களை அடுத்து வக்பு வாரியங்களை பாஜக அரசு குறி வைத்துள்ளது. வக்பு வாரியங்களை ஆய்வு செய்யும் அரசு, கோயில்கள், மடங்களின் சொத்துகளை விட்டு வைத்திருப்பது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவம் மற்றும் ரயில்வேயை அடுத்து, வக்பு வாரியத்துக்கு அதிக சொத்துகள் உள்ளன. தேசிய வக்பு நிர்வாக மையத்தகவலின்படி, நாடு முழுவதிலும் 8,54,509 சொத்துகள் வக்பு வாரியங்களுக்கு உள்ளன. இதன் நில அளவு சுமார் 8 லட்சம் ஏக்கர் ஆகும்.
உ.பி.யில் சன்னி, ஷியா ஆகிய 2 பிரிவுகளுக்கும் மத்திய வக்பு வாரியங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சன்னி வக்பு வாரியத்துக்கு 1.5 லட்சம், ஷியாக்களுக்கு 12,000 சொத்துகள் இருப்பதாக தெரிகிறது.