நாகை: மழைக்காலம் தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் குவிந்து வருகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். ரஷ்யா, ஆர்டிக் கிழக்கு ஐரோப்பா, மேற்காசிய நாடுகள், சீனா, ஈரான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மையில்கள் கடந்து வரும் பறவைகள், இங்கு இளைப்பாறி செல்கின்றன.
நடப்பாண்டில் சீசன் தொடங்கும் முன்பாகவே கூனே கெடா, பூ நாரை, கடல் ஆலா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் சரணாலயத்திற்கு வர தொடங்கியுள்ளன. சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் என வன சரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.