மதுரை: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்த வைத்த புகாரின் பேரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் ரேணுகாதேவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”நத்தம் தாலுகா கணவாய்பட்டி வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி மாணவர்களை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தி வருகிறார். இதை பெற்றோர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணாபிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ‘பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலைமை ஆசிரியர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.