சட்டவிரோத கும்பல்:
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் வழியாகத் தகவல் தொழில்நுட்ப பணிக்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் உட்பட 300 இந்தியர்கள் துபாய்க்குச் சென்றிருக்கிறார்கள். அங்குப் பணி இல்லை என்ற நிலையில், அவர்கள் அனைவரும் தாய்லாந்துக்குச் சென்றுள்ளார்கள். அங்கிருந்த இந்தியர்களை, சட்டவிரோதமாக ஒரு கும்பல் மியான்மருக்கு கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பல், ஐ.டி வேலைக்காகச் சென்றவர்களை, ஆன்லைனில் சட்டவிரோத செயல்களை செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் சொல்லும் பணியைச் செய்யாதவர்களை அந்த கடத்தல் கும்பல் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலிடமிருந்து தமிழர்கள் உட்பட 16 பேர் தப்பித்து, தாய்லாந்து எல்லைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்த தாய்லாந்து ராணுவம் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறது. தற்போது இந்தியர்களை அடைத்துவைத்துள்ள மியான்மர் நாட்டின் மியாவாடி நகரம், அங்குள்ள ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம்:
கடத்தல் கும்பலிடமிருந்து தப்பி வந்த தமிழர்கள் சிலர், தாங்கள் அனுபவித்த சித்திரவதை குறித்து வீடியோ பதிவு செய்து உதவி கேட்டனர். இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து. மியான்மரில் சிக்கியுள்ளவர்களை மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைப் பிரதமரின் உடனடி கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காகத் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவந்துள்ளது. பின்னர், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்திலிருந்து மியான்மருக்குக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்தகைய சட்டவிரோத வேலைகளைச் செய்ய மறுத்ததால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகிறது.
அவர்களில் 17 தமிழர்கள் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர். மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மரில் சட்டவிரோதமாகச் சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாகத் தாயகத்திற்குத் திரும்ப அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மரில் உள்ள தூதரகத்துக்கு இப்பிரச்னை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இந்த பிரச்னையில் பிரதமரின் அவசர தலையீட்டைக் கோருகிறேன். இந்தியர்களை விடுவித்து, தாய்நாட்டிற்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களைப் பத்திரமாக மீட்டுவர பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இந்நிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ மியான்மரில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தகவல்களை இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பவேண்டும். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை இந்தியத் தூதரகத்தின் மூலம் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அரசு சார்ந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கின்றோம். அவர்களைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை தீவிரமாக நடந்துவருகிறது” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசியிருக்கின்றோம். என்னிடம் அவர்களைப் பத்திரமாக மீட்பது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். மேலும், இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் நடந்துவருகிறது. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட சிக்கல்களையும் தாண்டி இதுவரை 30-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
“மியான்மரில் தற்போது இந்தியர்களை அடைத்துவைத்துள்ள இடமானது, மியான்மர் அரசின் வரையறைக்கு உட்பட இடங்களில் இல்லை. ஆயுதமேந்திய போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதனால், சிக்கியுள்ளவர்களின் விவரங்களைச் சேகரிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல்கள் யார் தெரிவித்தாலும், அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். எவ்வளவு சிரமம் இருந்தாலும், சிக்கியுள்ள அனைவரையும் மீட்பதில் அரசு முழு கவனம் செலுத்திவருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைத்தளங்களால் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மியான்மர் சென்ற இரண்டு தமிழர்களை அங்குள்ள ஆயுதமேந்திய அமைப்பு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டு மியான்மரில் கொடுமையான சித்திரவதை அனுபவித்ததாகவும், தற்போது தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாம்களில் சரியான உணவு கூட வழங்கப்படவில்லை என்றும் அங்குள்ளவர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர். எந்த காலதாமதமும் இல்லாது மியான்மரில் கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்டுவரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.