சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கவும், புதிய முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏராளமானோர் பணத்தைப் பறிகொடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போதைய திமுக அரசு, சட்டவல்லுநர்களுடன் ஆய்வு செய்தும், பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டும், புதிய அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படக் கூடாது என்பதில் அரசு முனைப்புடன் இருப்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த ஆக. 29-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான சட்டங்கள், வல்லுநர்களின் கருத்துகள், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்குமுன் ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு, அச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
தொழில் முதலீட்டுத் திட்டங்கள்
இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான அவசரச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும், தமிழகத்துக்கு புதிதாக வரும் தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் மற்றும் சலுகைகள் அளிப்பதற்கான முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் மற்றும் முதல்வரின் செயலர்கள் பங்கேற்பார்கள்.