2014இல் பாஜக ஆட்சியமைத்தற்கு பல காரணங்களில் முக்கியமான ஒன்று பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம். புதிய தேர்தல் வியூகங்களை வகுத்து தொழில்நுட்ப ரீதியாக மக்களை எளிதில் சென்றடைந்து அவர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்சிகளுக்கும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணி ஆற்றியுள்ளார். பெரும்பாலும் வெற்றியும் பெற்றுள்ளார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய உள்ளதாகவும், தேர்தல் பணிகளை அக்கட்சிக்கு மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இறுதியில் அது செயல்வடிவம் பெறாமல் போனது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாந்த் கிஷோர் யாருக்கு தேர்தல் பணி ஆற்றுவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அவர் இனி எந்தக் கட்சிக்கும் தேர்தல் பணியாற்ற மாட்டேன் என அறிவித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இனி எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் தேர்தல் பணியாற்ற மாட்டேன். இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். முதலில் எனது சொந்த மாநிலமான பீகாரில் நடைமுறையில் இருக்கும் சிஸ்டத்தை மாற்ற முடிவெடுத்துள்ளேன். மக்களை சந்தித்து பேச விரைவில் 3,000 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்வேன்” என கூறினார்.
ராகுல் காந்தியின் நடை பயணம் குறித்தும் தனது கருத்தை பிரசாந்த் கிஷோர் பதிவு செய்துள்ளார். “டிசம்பரில் குஜராத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டிருக்க வேண்டும், அல்லது உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடை பயணம் சென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என்று கூறினார்.