ராசிபுரம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கிணறு பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொட்டியில் தண்ணீர் நிரப்பி வந்தனர்.
இந்நிலையில் இன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (42) என்பவர் தண்ணீர் அருந்த தொட்டி அருகே சென்றுள்ளார். அப்பொழுது குழாய் வழியாக தண்ணீரை திறந்து பிடித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டி முழுவதும் உடைந்து சிதறி விழுந்தது.
அப்போது பாப்பாத்தி மீது செங்கல் தாக்கியதில் கீழே விழுந்த அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயில்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டப்பட்டு ஒரு வாரத்திலேயே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் கட்டுமான பணிகள் தரமற்றதாக இருந்ததாகவும் இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM