சென்னை : நகைச்சுவை நடிகர் சூரி ,பிரபல நடிகரின் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
போரோட்டா நகைச்சுவை மூலம் பிரபலமான சூரி, வைகை புயல் வடிவேலு போல, வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் பாடி லாங்வேஜ், மண் மனம் மாறாத பேச்சு என ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு பிடித்துப்போனார் நடிகர் சூரி.
நான் மகான் அல்ல, களவாணி, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்து வந்த சூரி பின்னாளில் சிவகார்த்திகேயன், சூர்யா, அஜித், விஜய், ரஜினி என டாப் நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நகைச்சுவை நடிகரானார்.
காமெடி காம்போ
சிவகார்த்திகேயனுடன் வாலிபர் சங்கம், மான் கராத்தே,நம்ம வீட்டு பிள்ளை மற்றும் சமீபத்தில் வெளியான டான் ஆகிய படங்களில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் சூரி நடித்து வருகிறார். சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காம்போ ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. நகைச்சுவை மட்டுமில்லாமல் குணசித்திர வேடத்திலும் மனுஷன் பின்னி எடுத்து வருகிறார்.

சிக்ஸ் பேக்குடன்
நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சிக்ஸ் பேக் மாஸாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் படம் என்றாலே அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் விஜய் சேதுபதியும், சூரியும் நடிப்பதால் இந்த படத்தின் மீது ஏகத்திற்கும் எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.

போலீசாக சூரி
இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலீசாக நடிக்கிறார். இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார்.

சூரியின் அடுத்த அதிரடி
இந்நிலையில் நடிகர் சூரி இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்படுகிறதாம். இதற்கிடையில் சூரி நகைச்சுவை நடிகராக இல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.