தமிழக வக்பு வாரியம், தங்கள் சொத்துக்களை மீட்டெடுக்க, பத்திரப்பதிவு துறை வாயிலாக போராடி வருகிறது. இந்நிலையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு சொத்தை மீட்டெடுக்க, வாரியம் உதவி செய்யாமல், தனியாருக்கு உதவி வருவதாக, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தில்ஷத் பேகம், 70 என்பவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தில்ஷத் பேகம் கூறியதாவது:
சென்னையின் பல பகுதிகளிலும், ஆற்காடு நவாப்புக்கு சொந்தமான வக்பு சொத்துக்கள் உள்ளன. அதில், சில சொத்துக்கள், திருவல்லிக்கேணியில் உள்ள, ‘அசார் ஐ செரீப் நவாட்யாத் கவுதி வக்பு’ என்ற மசூதிக்கு சொந்தமானவை.ஐந்து தலைமுறைகளுக்கு முன், இந்த சொத்துக்களை பராமரிக்கும் பணி, எங்கள் முன்னோருக்கு வழங்கப்பட்டது. வாழையடி வாழையாக எங்கள் குடும்பத்தை சேர்ந்தோர் முத்தவல்லியாக இருந்து, சொத்தை பராமரித்து வந்தோம்.
ஒரு கட்டத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போக, மரபு மற்றும் வக்பு சட்டங்களின் அடிப்படையில், எங்கள் குடும்பத்தை சேர்ந்த முக்குருன்னிஷா பேகம் என்பவர், முத்தவல்லியாக நியமிக்கப்பட்டார்.
அவருக்குப் பின், அவரது மகளும், என் தாயுமான அசீஸ் ஜான் முத்தவல்லியானார். பின், அந்த பொறுப்பு எனக்கு வந்தது. சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை வசூலித்து கொடுக்கவும், மசூதி வாயிலாக இறை பணியை மேற்கொள்ளவும், கே.பி.இஸ்மத் பாஷா என்பவரை, என் தாய் நியமித்திருந்தார்.
ஒரு கட்டத்தில், என் தாயை ஏமாற்றி, குறிப்பிட்ட வக்பு சொத்துக்கு தன்னையே முத்தவல்லியாக நியமிக்க, இஸ்மத் பாஷா முயற்சித்தார். இதற்கு, வக்பு வாரியமும் துணையாக இருந்துள்ளது. என் தாய் அசீஸ் ஜானுக்கு இது தொடர்பாக நெருக்கடி கொடுக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டப்படி, வக்பு சொத்துக்கு யாரை முத்தவல்லியாக நியமிக்கின்றனரோ, அவருக்கு பின், அவரது வாரிசுகளில் மூத்தவருக்கு தான் முத்தவல்லி பொறுப்பு வழங்க முடியும்.
பரம்பரையாக இது தான் நடைமுறை. இதற்கு சட்ட அங்கீகாரமும் உள்ளது.
குறிப்பிட்ட பரம்பரையை சாராத மூன்றாவது நபரை, முத்தவல்லியாக நியமிக்க முடியாது. ஆனாலும், வக்பு வாரியம் துணையுடன் இஸ்மத் பாஷா, தன்னை முத்தவல்லியாக நியமித்து கொண்டார். ‘அசார் ஐ செரீப் நவாட்யாத் கவுதி வக்பு’ என்ற மசூதிக்கு சொந்தமான திருவல்லிக்கேணி இடங்களையும் ஆக்கிரமித்து கொண்டார். இதை எதிர்த்து, 2001ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் பிரச்னையை எடுத்து சென்றேன். உடனே, சிறுபான்மை நலத் துறை செயலர் விசாரணை துவங்கியது. வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அன்வர் ராஜா வந்தார்.
அவரும் முத்தவல்லியாக என்னை நியமித்தது செல்லும் என்று அறிவித்தார். வக்பு தீர்ப்பாயமும் அதையே கூறியது; வக்பு சொத்துக்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருப்போரை அகற்றவும் உத்தரவிட்டது. சொத்துக்களை என் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, போலீஸ் உதவியுடன் முயன்றேன்; முடியவில்லை. தொடர்ந்து வக்பு வாரியம், சிவில் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சிறுபான்மை நலத்துறை என, என் சட்டப் போராட்டம் தொடருகிறது. எல்லா துறைகளும் எனக்கு ஆதரவாக உத்தரவு போட்டும், வக்பு சொத்துக்களையும், நிர்வாகத்தையும் கையில் எடுக்க முடியவில்லை.
தற்போதைய, வக்பு வாரிய தலைவரான அப்துல் ரஹ்மான், எனக்கு எதிராக செயல்படுகிறார். முத்தவல்லி உரிமையை என்னிடம் இருந்து பறித்து, வக்பு சொத்தையும், மசூதி நிர்வாகத்தையும், இஸ்மத் பாஷாவுக்கே கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். எனவே, நியாயம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினேன். முதல் கட்ட விசாரணை நடந்துள்ளது. வக்பு சொத்தை மீட்டு, முத்தவல்லியான என நிர்வாகத்தின் கொண்டு வர உதவுவதாக, மத்திய உள்துறை அதிகாரிகள் கூறினர். அது, ஆறுதலாக உள்ளது. ஆனால், நியாயம் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.-
‘‛தனிப்பட்ட பிரச்னை!’
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ”குறிப்பிட்ட வக்பு சொத்துக்கள் குறித்த பல கட்ட விசாரணை முடிவுகள், தில்ஷத் பேகத்துக்கு ஆதரவாக உள்ளன. இருந்தாலும், இது தொடர்பாக, மீண்டும் வக்பு வாரியம் விசாரிக்க உள்ளது. அதன்பின் முடிவெடுக்கப்படும். பிரச்னை, இரு தனிப்பட்ட நபர்களுக்கானது. இதில் தலையிட வேண்டாம்,” என்றார்.
— நமது நிருபர் —
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்