வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! தொலைத்தொடர்பு மசோதா 2022 மசோதாவில் தகவல்

டெல்லி: இணையவழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப், ஸூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட தொலைத்தொடர்பு மசோதா 2022ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வளர்ச்சியால், தற்போது, ஆடியோ, வீடியோ கால்கள் மட்டுமின்றி, பெரும்பாலான மக்கள் நல சேவைகளும் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. நகரம் முதல் கிராமம் வரையிலான  மக்கள் தற்போது டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில்,  மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிதாக தொலைத்தொடர்பு மசோதா 2022ஐ உருவாக்கி வருகிறது. இந்த புதிய மசோதாவில் ஓடிடி மற்றும் அனைத்து இணையவழி சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி இணையவழி கால் வசதிகளை வழங்கும் செயலிகள் மத்திய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,  இணைய அழைப்பு மற்றும் செய்தி அனுப்பும் சேவைகளை வழங்கி வரும் OTT நிறுவனங்கள் இனி இந்தியாவில் செயல்பட உரிமம் பெற்றாக வேண்டும்.

இதனால், பெரும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், ஸூம், கூகிள் டியோ ஆகிய செயலிகளை உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு நுழைவு கட்டணம், உரிம கட்டணம், பதிவு கட்டணம், அபராதம், கூடுதல் கட்டணம், வட்டி ஆகிவற்றை பகுதி அளவுக்கு அல்லது முழுமையாகவோ தள்ளுபடி செய்யவோ மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களோ அல்லது இணைய சேவை நிறுவனங்களோ உரிமத்தை ஒப்படைத்தால் அவற்றுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும்.

அதுபோல மத்தியஅரசு  அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், இந்தியாவில் வெளியிடுவதற்காக அளிக்கும் பத்திரிகை செய்திகளுக்கு, இடைமறித்து ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், தேச பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, இறையாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்று தொலைத்தொடர்பு மசோதா 2022-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா குறித்து வரும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.