வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு புதிய கட்டுப்பாடு

உலகம் முழுவதும் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ் அப், ஸூம், கூகுள் டுவோ, ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பலரும் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த செயலிகள் பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக சாதாரணமாக தொலைப்பேசி அழைப்பு பயன்பாடு ஒரு சில நேரங்களில் குறைந்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் வாட்ஸ் அப், ஸ்கைப், ஸூம், கூகுள் டுவோ உள்ளிட்ட செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதாவது இந்தச் செயலிகள் அனைத்தும் உரிமம் பெற்ற பின்பே இந்தியாவில் இயங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளை அளிக்க உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று மசோதாவில் உள்ளது.

ஓடிடி செயலிகளையும் தொலைத் தொடர்பு சேவைக்குள் கொண்ட இந்த மசோதா வழி வகை செய்ய உள்ளது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களோ அல்லது இணைய சேவை நிறுவனங்களோ தங்களது உரிமத்தை திரும்ப ஒப்படைத்தால் அவற்றுக்கு கட்டணம் திருப்பித்தரப்படும். அந்த நிறுவனங்களுக்கு நுழைவு கட்டணம், உரிம கட்டணம், பதிவு கட்டணம், அபராதம், கூடுதல் கட்டணம், வட்டி ஆகியவற்றை பகுதி அளவுக்கோ அல்லது முழுமையாகவோ தள்ளுபடி செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் இந்தியாவில் வெளியிடுவதற்காக அளித்த பத்திரிகை செய்திகள், இடைமறித்து ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆனால், தேச பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இந்த விலக்கு பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.