பலரின் நம்பிக்கை தகர்ந்து போனாலும், ஓர் உயிர் அசைவின்றிக் கிடந்தாலும், போகவிருக்கும் உயிரையும் இழுத்துப் பிடித்துப் போராடி மீட்டுக் கொண்டு வரும் மருத்துவர்கள் அநேகம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் ஆக்ராவில் நிகழ்ந்துள்ளது.
ஆக்ராவின் சமூக சுகாதார மையத்தில் கர்ப்பிணி ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. சில பிரச்னைகளின் காரணமாகக் குழந்தை மூச்சற்று இருந்துள்ளது. உடலிலும் எந்த அசைவும் இல்லை. முதலில் மருத்துவரும் செவிலியர்களும் மருத்துவச் செயல்முறைகளைச் செய்துள்ளனர். ஆக்ஸிஜனும் வழங்கி உள்ளனர். ஆனாலும் குழந்தையின் உடலில் எந்த மாற்றமும் இல்லை.
அதனைத் தொடர்ந்து மருத்துவர் சுலேகா சௌத்ரி, தன்னுடைய தைரியத்தையும் மன உறுதியையும் இழக்காமல் குழந்தையின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றைச் செலுத்தி உள்ளார். 7 நிமிடங்கள் வரை தொடர்ந்து இந்தச் செயல்முறையைச் செய்ததோடு, குழந்தையைக் குப்புறப் பிடித்து, முதுகில் பலமுறை தட்டித் தேய்த்து விட்டுள்ளார்.
குழந்தை அசைந்து உயிர்பெற்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் பெற்றது. மருத்துவரின் விடாமுயற்சிக்குப் பலரும் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பே இந்த நிகழ்வு நடந்து அனைவரின் கவனத்தையும் பெற்றபோதும், தற்போது மீண்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எத்தனை முறை பார்த்தாலும், மருத்துவரின் விடாமுயற்சியும், குழந்தை உயிர் பெரும் தருணங்களும் சலிக்காதவை தானே…