ஸ்பார்ட்டன்பர்க்: பொம்மை துப்பாக்கி என நினைத்து 3 வயது குழந்தை நிஜ துப்பாக்கியை எடுத்து சுட்டதில் அதன் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
விளையாட்டு வினையாகும் என வீட்டில் பெரியவர்கள் கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். விளையாட வேண்டிய விஷயத்தில்தான் விளையாட வேண்டும். மாறாக, ஆபத்தான செயல்களில் ‘வேடிக்கை’ என்ற பேரில் சிலர் செய்யும் குறும்புகள் மரணத்தில் முடிந்திருக்கின்றன. பேருந்துகள், ரயில்களில் தொங்கியபடி பயணம் செய்வது; மிருகக்காட்சி சாலைக்கு சென்று விலங்குகளை சீண்டி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மரணத்தை தழுவும் சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்த வகையில், பொம்மைகளை கொடுத்து விளையாட வைக்க வேண்டிய வயதில், குழந்தைக்கு துப்பாக்கியை கொடுத்ததால் அதற்கான விலையை அவர்களின் பெற்றோர் கொடுத்துள்ளனர். இந்த பரிதாப சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:
துப்பாக்கி பிரியர்..
அமெரிக்காவின் தெற்கு காரோலினா மாகாணத்தில் உள்ள ஸ்பார்ட்டன்பர்க் நகரைச் சேர்ந்தவர் ஆஸ்டின் புஷ். மென்பொருள் பொறியாளரான இவருக்கு கோரோ லின் (33) என்ற மனைவியும், ஜோ ஃபெரின் என்ற 3 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இதனிடையே, ஆஸ்டின் புஷ் தற்காகப்புக்காக தனது வீட்டில் கைத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இயல்பாகவே துப்பாக்கி மீது அதிகம் பிரியம் கொண்டவரான ஆஸ்டின், தனது மகனுக்கும் அதிக அளவில் விதவிதமான விலை உயர்ந்த பொம்மை துப்பாக்கிகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மறதியால் வந்த ஆபத்து..
விலை உயர்ந்த துப்பாக்கிகள் என்பதால் அவை நிஜ துப்பாக்கியை போன்று இயக்கும் வகையில் இருந்தன. இதனால் ஜோ ஃபெர்ரிக்கு துப்பாக்கியை இயக்கும் வழிமுறை நன்றாக தெரிந்திருந்தது. அவர்களின் பெற்றோரும் ஆபத்தை அறியாமல் அதை ஊக்குவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆஸ்டின் நேற்று அலுவலகத்துக்கு செல்வதற்காக முக்கியக் கோப்பை ஒன்றை தேடியுள்ளார். அப்போது பீரோவில் இடைஞ்சலாக இருந்த நிஜ கைத்துப்பாக்கியை கட்டில் மீது வைத்துள்ளார். பின்னர், கோப்புகளை எடுத்த அவர், கட்டிலில் இருந்த கைத்துப்பாக்கியை மீண்டும் பீரோவுக்குள் வைக்க மறந்துவிட்டார்.
நிஜ துப்பாக்கியை எடுத்து..
இந்த சூழலில், மதிய வேளையில் சிறுவன் ஜோ, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கட்டிலில் துப்பாக்கி இருப்பதை பார்த்தான். பின்னர் அதை எடுத்து வழக்கம் போல விளையாட தொடங்கினான்.
அந்த சமயத்தில், அவனது தாயார் கோரோ லின், சிறுவனுக்கு சாப்பாடு எடுத்து வந்தார். அப்போது சாப்பிட மாட்டேன் என ஜோ அடம்பிடிக்க, அவனை துரத்திச் செல்வது போல விளையாடி இருக்கிறார் கோரோ லின். அப்போது, சிறுவன் ஜோ தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடுவதை போல அவரை நோக்கி நீட்டியுள்ளான்.
வெடித்தது குண்டு..
கோரோ லின்னும் பொம்மை துப்பாக்கி தானே என நினைத்து அசால்ட்டாக இருந்திருக்கிறார். அப்போது குழந்தை விளையாட்டுத் தனமாக ட்ரிக்கரை அழுத்த உண்மையிலேயே துப்பாக்கி வெடித்து கோலோ லின்னின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கோரோ லின் கீழே சரிந்தார்.
துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து, கோரோ லின்னை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்பார்ட்டன்பர்க் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவை அச்சுறுத்தும் துப்பாக்கி..
பொதுவாக, அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் துப்பாக்கியை வாங்கிக் கொள்ளலாம். இதனால்தான் அங்கு அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் குழந்தைகள் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதில் 82 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 123 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.