சென்னை: விலையில்லா சைக்கிளில் சாதிப் பெயர் குறியீடு இருப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகளுக்கு வழங்குவதற்கான சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது சைக்கிள் இருக்கையில் எம்.பி.சி, பி.சி. எஸ்.சி என சாக்பீசில் குறியீடு எழுதப்பட்டிருந்தது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டுப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.