சென்னை: விழுப்புரம் மாவட்டம் கன்னலம் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை அடுத்த கன்னலம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “எங்கள் கிராமத்தில் குத்துச்சண்டை, பேட்மிண்டன், கிரிக்கெட், தடகளம், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வாங்கும் திறமை கொண்ட, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க கூடிய வீரர் வீராங்கனைகள் உள்ளனர்.
இவர்கள் முறையாக விளையாட போதுமான விளையாட்டு திடல்களோ, வசதிகளோ இல்லாததால் வேளாண் நிலங்கள், பொது இடங்கள், சாலைகள் ஆகியவற்றில் பயிற்சி பெற்று, விளையாடி வருகின்றனர்.
தமிழக அரசின் அம்மா ஊரக இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு திடல் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விளக்கம் பெற்றபோது, மந்தைவெளி நிலத்திற்கு அருகே திடல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.
விளையாட்டு திடல்கள் அமைத்து தரும்படி கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், கன்னலம் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.எனவே தமிழக அரசு அம்மா ஊரக இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் கன்னலம் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விளையாட்டு திடல் அமைப்பது தொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.