சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஷால் தற்போது ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஷாலின் வீரமே வாகை சூடும் படம் வெளியான போது லைகா நிறுவனம் ரிலீஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
லைகா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷாலின் வீரமே வாகை சூடும்
விஷால் நடிப்பில் கடைசியாக வீரமே வாகை சூடும் திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. துபா சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக வீரமே வகை சூடும் படத்திற்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு விஷாலின் 21 கோடி ரூபாய் கடனை, லைகா நிறுவனம் அடைத்ததே காரணம் எனக் கூறப்பட்டது.
![கடனில் சிக்கிய விஷால்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/vishal-600-26-1472199157-down-1663932593.jpg)
கடனில் சிக்கிய விஷால்
விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடனை விஷாலுக்குப் பதிலாக லைகா நிறுவனம் அன்புச்செழியனுக்கு கொடுத்தது. இந்தப் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட முயன்ற விஷாலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
![நேரில் ஆஜரான விஷால்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/20-1432091782-vishal5-600-down-1663932602.jpg)
நேரில் ஆஜரான விஷால்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து நேரில் ஆஜரான விஷால், இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான், நான் பணத்தை செலுத்தவில்லை எனக் கூறியிருந்தார். மேலும், எனக்கு ஒரேநாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், அவரது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், மீண்டும் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
![விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/vishal465-1527414646-down-1663932620.jpg)
விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்
இதனையடுத்து இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுபடி சொத்து விவரங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இன்று (செப்டம்பர் 23) ஒத்திவைத்திருந்தது..
![அக்டோபரில் அடுத்த விசாரணை](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/07-1438935583-vishal1-1617263442-down-1663932628.jpg)
அக்டோபரில் அடுத்த விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை வங்கியில் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு, அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என விஷால் தரப்பு கூறியது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், விஷாலுக்கு எதிரான வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.