சென்னை : 90களில் கிராமத்து பின்னணி கொண்டகதைகளில் மிகவும் எதார்த்தமாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ராமராஜன். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு என இன்னும் ஏராளமான படங்களை சத்தமே இல்லாமல் வெள்ளிவிழா கண்டன.
ராமராஜன் கடைசியாக 2012ம் ஆண்டு மேதை என்கிற படத்தில் நடித்திருந்தார். இதைடுத்து தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் சாமானியன் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் தயாராகிறது.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன், கோடி ரூபாய் கொடுத்தாலும் தரங்கெட்ட படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.
சாமானியன்
ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், நக்சா சரண், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் சாமானியன். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். நக்ஷரா என்ற புதுமுகம் ஹீரோயினா நடிக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க உள்ளார்.
கதை தான் ஹீரோ
இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய ராமராஜன் சாமானியன் படத்தின் ஹீரோ திரைக்கதை தான். 20 படம் தொடர்ந்து ஹிட் கொடுத்த ஹீரோ நான் மட்டும் தான் அதற்கு காரணம் என் ரசிகர்கள் தான். 10 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறேன். தொடர்ந்து நடித்திருப்பேன், ஆனால் அரசியல் பணிகள் வந்தது, ஒரு பெரிய விபத்தில் சிக்கி ஒரு வருடத்திற்கு மேல் ஓய்வெடுக்க வேண்டியதாகி விட்டது.
தரங்கெட்ட படங்களில்
அதன்பிறகு பலரும் வந்து என்னிடம் கதை சொன்னார்கள், நடிக்க அழைத்தார்கள், கோலிசோடா 2, கரகாட்டக்காரன் 2 படங்களில் நடிக்க கேட்டார்கள். எனக்கு இரண்டாம் பாக கதைகளில் நடிக்க விருப்பமில்லை இதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் மக்கள் நாயகன் என்று பெயர் எடுத்தவன். எனவே மக்களுக்கு பயனுள்ள படங்களில்தான் நடிப்பேன். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தரங்கெட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.
ஹீரோவகத்தான் நடிப்பேன்
நான் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்ற எங்கேயும் சொன்னதில்லை. அப்படி யாரோ சொல்லி பரவியது. சரி அதுவும் நியாயம்தான் என்று நானும் அமைதியாக இருந்து விட்டேன். இதுவரை 44 படங்களில் ஹீரோவாக நடித்து விடடேன் இது 45வது படம். 45 படங்களில் ஹீரோவாக நடித்த நடிகன் நான் மட்டும்தான். இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ. நல்ல கதையோடு வந்தால் தொடர்ந்து நடிப்பேன்.