203* – பாபர் அசாம் – ரிஸ்வான் கூட்டணியும்; அதிர்ந்துபோன இங்கிலாந்தும்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் வெறியாட்டம் ஆடியிருக்கின்றனர். இங்கிலாந்து அணி செட் செய்த 200 ரன்கள் டார்கெட்டை விக்கெட்டே இழக்காமல் எட்டிப்பிடித்து பல பழைய சாதனைகளையும் அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கும் இந்தக் கூட்டணியைப் பற்றி இங்கே…

7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்காக மொயீன் அலி தலைமையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றிருந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 199 ரன்களை எடுத்திருந்தது. மொயீன் அலி அதிரடியாக அரைசதம் அடித்திருந்தார். பாகிஸ்தான் அணிக்கு 200 ரன்கள் டார்கெட். விறுவிறுப்பான சீட் எட்ஜ் திரில்லராக சேஸிங் இருக்கும் என எதிர்பார்க்கையில் ஆட்டம் அதற்கு மாறாக அமைந்திருந்தது. ஓப்பனிங் இறங்கிய ரிஸ்வானும் பாபர் அசாமும் முதல் சில ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அதன்பிறகு, முழுக்க முழுக்க இருவரின் ராஜ்ஜியம்தான். பாபர் அசாம் தனது 2 வது சர்வதேச டி20 சதத்தை அடிக்க, ரிஸ்வான் அவருக்கு ஒத்துழைத்து 88 ரன்களை அடித்திருந்தார். 200 ரன்களை விக்கெட்டே விடாமல் பாகிஸ்தான் சேஸ் செய்து முடித்தது. இந்த இன்னிங்ஸ் மூலம் இருவரும் படைத்த சாதனைகள் சில..

Babar & Rizwan

டி20 போட்டிகளில் விக்கெட்டே விடாமல் சேஸ் செய்யப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இதுவே.

இருவரும் இணைந்து கூட்டாக எடுத்திருக்கும் இந்த 203 ரன்கள்தான், டி20 போட்டிகளில் சேஸிங்கில் ஒரு கூட்டணி எடுத்த அதிகபட்ச ரன்னாக பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்னதாகவும் தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான இவர்களின் 197 ரன்கள் கூட்டணியே அதிகபட்சமாக இருந்தது. அவர்களின் சாதனையை அவர்களே முறியடித்திருக்கிறார்கள்.

பாபர் அசாமும் ரிஸ்வானும் இணைந்து இதுவரை 5 முறை 150+ ரன்களுக்கு கூட்டணி அமைத்திருக்கின்றனர். டி20 போட்டிகளில் வேறு எந்த கூட்டணியும் இத்தனை முறை 150+ ரன்களை எடுத்ததே இல்லை.

இதுவரை 3 முறை பாகிஸ்தான் அணி 200+ சேஸிங்கை செய்திருக்கிறது. மூன்று முறையும் பாபரும் ரிஸ்வானும் 150+ ரன்களுக்கு கூட்டணி அமைத்திருக்கின்றனர்.

டி20 என்றாலே வேகம்தான் என்பதை தாண்டி இப்போதெல்லாம் அல்ட்ரா ஸ்பீட் என்கிற மோடுக்கு டி20 சென்றுவிட்டது. முதல் பந்திலிருந்து கடைசி பந்து வரைக்குமே அடிதான். இளைப்பாறுதல் என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது. விக்கெட் விழுந்தாலும் அடுத்த பந்தையே சிக்ஸராக்க வேண்டும். இந்திய அணியுமே கூட இப்போது அப்படியான அல்ட்ரா ஸ்பீட் மோடுக்குதான் தங்களை தகவமைத்துக்கொள்ளும் ப்ராசஸில் இருக்கிறது. ஆனால் இந்த ட்ரெண்ட்டில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் கொஞ்சம் பிற்காலத்திய மனநிலையிலிருந்தே தொடர்ந்து சாதனைகளை செய்து வருவதுதான் பாபர் அசாம் ரிஸ்வான் கூட்டணியின் சிறப்பு. டி20 யை ஒரு ஓடிஐ மனநிலையோடு ஆடும் பாணிதான் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கான ரகசியமாக இருக்கிறது. பெரிய அவசரம் எதுவுமின்றி இயல்பாகத் தொடங்கி செட்டில் ஆகி பின் வேகத்தைக் கூட்டுவார்கள். இரயில் வண்டியின் இயங்குதலோடு இவர்களின் ஆட்ட முறையை ஒப்பீட்டுக் கொள்ளலாம். ஒரு ஓடிஐ போட்டியில் ஒரு இணை தங்களை காம்ப்ளீமெண்ட் செய்து கொள்வதற்கு இணையாகத்தான் இங்கே டி20 போட்டியிலும் இவர்கள் ஒருவரையொருவர் காம்ப்ளீமெண்ட் செய்து கொள்வார்கள். ரிஸ்வான் வேகமாக தொடங்கினால் பாபர் கொஞ்சம் அடங்கிப்போவார். பாபர் செட்டில் ஆகி வீரியமாக பேட்டை சுழற்றும் போது ரிஸ்வான் கொஞ்சம் அடங்கிப் போவார். ஒருவர் புகுந்து ஆடும்போது எதிர்முனையில் இன்னொருவர் எந்த எதிர் துடிப்புகளுமின்றி வெறும் ரசிகனாக மட்டுமே நிற்பார்.

Babar Azam

இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியிலேயுமே கூட முதலில் ரிஸ்வான்தான் வேகமெடுத்து ஆடியிருந்தார். 200 ரன்களை சேஸ் செய்த சமயத்தில் முதல் 10 ஓவர்கள் முடிந்திருந்த தருவாயில் பாகிஸ்தான் அணி 87 ரன்களை எடுத்திருந்தது.

ரிஸ்வான் 29 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்தார். அதேநேரத்தில், பாபர் அசாமோ 31 பந்துகளில் 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆக, நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதி ரிஸ்வானுடையது. அந்த முதல்பாதியில் பாபர் அசாம் செய்தது துணை கதாபாத்திரம் மட்டுமே.

அதேநேரத்தில் இரண்டாம் பாதி அப்படியே பாபர் அசாமுடையது. அதில், பாபர் அசாம்தான் முதன்மை கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தார். ரிஸ்வான் எதிர்முனையில் நின்று அவருக்கு ஒத்துழைப்பு மட்டுமே நல்கினார்.

முதல் 10 ஓவர்களில் 31 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பாபர் அசாம், இரண்டாம் பாதியில் அடுத்த 31 பந்துகளில் சதத்தையே எட்டிவிட்டார்.

Babar & Rizwan

வெற்றிகரமாக சேஸிங்கை முடித்த சமயத்தில் பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களையும் ரிஸ்வான் 51 பந்துகளில் 88 ரன்களையும் எடுத்திருந்தனர். ஏற்றுக்கொண்ட ஆட்டமுறையைப் பற்றி இருவரும் புரிந்து வைத்திருக்கும் விதமே அவர்களின் பெரிய பலம். சொல்லப்போனால், இந்தத் தொடர் வண்டி போன்ற ஊர்ந்து ஊர்ந்து வேகமெடுக்கும் ஆட்டமுறையை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் என்று கூட சொல்ல முடியாது. குறைபாடுடைய மிடில் ஆர்டரை கொண்டிருப்பதால் ஓப்பனர்களிடமிருந்து அதிரடியை விட நீடித்த நிலையான ஆட்டத்தைத்தான் அணியுமே எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை பாபர் அசாமும் ரிஸ்வானும் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள்.

வாழ்த்துகள் ஓப்பனர்ஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.