திம்பு: சுமார் 30 மாதங்களுக்குப் பிறகு இந்தியா – பூட்டான் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் தங்க விரும்பும் இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாடு கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளது.
இமயமலையின் சிறிய சிற்றறரசு நாடு தான் பூட்டான். கரோனா தொற்று பரவல் காரணமாக தனது எல்லை கதவுகளை மூடியது. இந்நிலையில், சுமார் 30 மாதங்களுக்குப் பிறகு எல்லைகளை திறந்துள்ளது அந்த நாடு. பூட்டானுக்கு சுற்றுலா நிமித்தமாக இந்தியர்கள் அதிகம் சென்று வரும் தளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டுக்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த சூழலில் அப்படி வரும் வெளிநாட்டு மக்களிடம் கட்டணம் வசூலிக்க பூட்டான் அரசு கொள்கை அளவிலான முடிவை எடுத்தது. அதன்படி இப்போது அந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் பூட்டான் சென்றால் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிகிறது. அதே போல மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் சுமார் 200 அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிகிறது.
இந்தியாவில் இருந்து செல்லும் மக்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை காண்பித்து பூட்டான் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்து. ஆன்லைன் மூலம் தங்களது வருகை குறித்து பதிவு செய்வதும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் எல்லை திறந்ததும் வியாபார நோக்கிலும், வேலை தேடியும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பூட்டான் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.