மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் தசரா அன்று ஒவ்வோர் ஆண்டும் சிவசேனா சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொதுக்கூட்டம் நடத்தப்படாமல் இருக்கிறது. இந்த ஆண்டு பொதுக்கூட்டம் நடத்த சிவசேனா ஆரம்பத்திலேயே மும்பை மாநகராட்சியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தது. நடப்பு ஆண்டில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்திருப்பதால் ஷிண்டே அணியும் தங்களுக்கு சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்திருந்தது. தாதர் மட்டுமல்லாது பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஷிண்டே அனுமதி கேட்டிருந்தார்.
இதில் பாந்த்ராவில் பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தாதரில் பொதுக்கூட்டம் நடத்த இரு தரப்பினருக்கும் அனுமதி கொடுக்க முடியாது என்றும், ஒரு அணிக்கு அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. ஷிண்டே தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் உத்தவ் தாக்கரே அணிக்கு தாதரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்ககூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “1966-ம் ஆண்டிலிருந்து தாதரில் சிவசேனா தரப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 2015-19-ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கொரோனாவிற்குப் பிறகு தாதரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடந்த மாதம் 26-ம் தேதியே மும்பை மாநகராட்சியில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதற்கு எந்தவித பதிலும் இல்லை” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தாதர் சிவாஜி பார்க்கில் அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து 6-ம் தேதிக்குள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது.
பொதுக்கூட்டம் நடத்தும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் சிவசேனா தனது 56 ஆண்டுக்கால உரிமையை மீட்டெடுத்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “ஒரே தலைவர், ஒரே சிவசேனா, ஒரே சிவ்தீர்த்தா. தசரா பொதுக்கூட்டத்தில் 5-ம் தேதி புலியின் கர்ஜனையைக் கேட்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு அணிகள் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதால் பாதுகாப்புக்கு தேவையான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.