எய்ம்ஸ் அமைப்பதற்கான உயர்த்தப்பட்ட நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கபடாமல் இருப்பதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை) தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில், “சாவர்கர் புல்புல் பறவையில் இருந்து வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக ஒரு கட்சியின் அகில இந்திய தலைவர் பொய் சொல்வது ஏற்புடையதல்ல.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1200 கோடி என்பது 1970 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட 700 கோடிக்கான மத்திய அரசு வழங்க வேண்டிய 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வற்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதால் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் விடமுடியாத நிலை உள்ளது. உயர்த்தப்பட்ட தொகைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக மக்களையும் மதுரை மக்களையும் பொய் சொல்லி ஏமாற்றலாம் என பாஜக அரசு நினைக்கிறது பொய் சொல்வதையே முழுநேர வேலையாக பாஜக செய்து வருகிறது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “வடிவேல் கிணற்றை காணோம் என புகார் அளித்தது போல் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸ்யை காணவில்லை” என விமர்சனம் செய்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM