மதுரை: 95 சதவீத எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடைந்ததாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய நிலையில், நிறைவடைந்த பணிகளை பார்வையிட மதுரை, விருதுநகர் எம்பிக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் தேடி பார்த்தனர். அங்கு கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறா நிலையில், இருந்த ஒரு செங்கலை கூட காணவில்லை என்று அவர்கள் பேட்டி அளித்தனர். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பேசும்போது, ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. விரைவில் கட்டுமானம் முடிவுற்று அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்’’ என்று பேசினார்.
இவரது பேச்சால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் பிப். 28, 2015ல் அறிவிக்கப்பட்டது. மதுரை தோப்பூரில் ஜூன் 18, 2018ல் இடம் தேர்வானது. டிச. 17, 2018ல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜன. 27, 2019ல் பிரதமர் மோடியால் மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டது. நவ. 25, 2019ல் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. நவ. 3, 2020ல் மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு, தற்போது ரூ.1,970 கோடி என திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவை உயர்த்தப்பட்ட நிதிக்கு ஒப்புதல் தர வேண்டும்.
எய்ம்ஸ் கட்டுமானத்தை பொறுத்தவரை கட்டுமான மேலாண்மை நிறுவனத்தையே இன்னும் இறுதி செய்யவில்லை, பிரதான கட்டிடங்களை கட்ட இன்னும் டெண்டர் விடப்படவில்லை. பிரதான கட்டிடங்களின் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. ஆனால், பாஜ தேசியத்தலைவர் 95 சதவீத பணிகள் நிறைவடைந்திருப்பதாக பேசி விட்டு சென்றுள்ளதை கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இருவரும் எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்டனர். அங்கு அவர்கள், காலியிடமாக உள்ள எய்ம்ஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் போட்டோவுடன் கூடிய பதாகைகளை கைகளில் வைத்தபடி தேடி பார்த்தனர். அப்போது எந்த பணிகளும் அங்கு நடைபெறாததை சுட்டிக் காட்டினர்.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘சவார்கார் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வந்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக பாஜ அகில இந்திய தலைவர் பொய் சொல்வது ஏற்புடையது அல்ல. திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளதால், கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் விட முடியாத நிலை உள்ளது. உயர்த்தப்பட்ட தொகைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும். தேடிப் பார்த்ததில் இந்த இடத்தில் இருந்த போர்டையும் கூட இப்போது காணவில்லை. ஒரே ஒரு செங்கல் இருந்தது. இப்போது அதையும் காணவில்லை.
இதேபோல் ஒரு பைசா கூட ஒதுக்காமல் மதுரை விமான நிலையத்திற்கு ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் பாஜ தலைவர் பேசியுள்ளார். இது மதுரை மக்களை ஏமாற்றுகின்ற, வஞ்சிக்கின்ற செயல். தமிழக மக்களையும், மதுரை மக்களையும் பொய் சொல்லி ஏமாற்றலாம் என பாஜ அரசு நினைக்கிறது. பொய் சொல்வதையே முழு நேர வேலையாக பாஜ செய்து வருகிறது’’ என்றார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறும்போது, ‘‘மதுரை எய்ம்ஸ் அமைந்தால் அதற்கான பெருமை, எய்ம்ஸ் அமைய முழு பங்களிப்பை கொடுத்துள்ள ஜப்பானையே சாரும். வடிவேல் கிணற்றை காணவில்லை என புகார் அளித்து தேடியது போல், 95 சதவீத பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸை தேடினோம்… காணவில்லை. ஜேபி.நட்டா மதுரை மக்களுக்கே மல்லிகை பூவை சூட்ட பார்க்கிறார்’’ என்றார்.
* புல்புல் பறவைகள் மூலம்…
மதுரை எம்பி சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘பாஜ ஆட்சியில், புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகிதம் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி, நானும் எம்.பி மாணிக்கம் தாகூரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்’’ என்று கேலியுடன் பதிவிட்டுள்ளார்.