காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் காந்தி குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சித் தலைவராக பதவியேற்கும்படி பல முறை வலியுறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை.
இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கும் வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு, உறுதியான, தெளிவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில், காங்கிரஸ் நிர்வாகிகள், 9,000க்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க உள்ளனர். 22 ஆண்டுகளுக்குப் பின், கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், ‘ஜி – 23’ எனப்படும் அதிருப்தி குழுவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள மூத்த தலைவர் அசோக் கெலாட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவர் அதிகாரப்பூர்வமாக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவு இவருக்கு உள்ளது. இதனால், அசோக் கெலாட் மற்றும் சசிதரூர் இடையே போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன். தலைவர் பதவி மீது ராகுல் காந்தி குடும்பத்தினருக்கு ஆசையில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் வலிமையான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, சோனியா காந்தி மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.