மதுரை: “அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் தவறு நடந்துள்ளது. இதையெல்லாம் திருத்துவது எங்களது கடமை. இதை திருத்தாவிட்டால் எங்களது அடிப்படைக் கொள்கைக்கே நாங்கள் துரோகம் செய்கிறோம்” என்று அர்த்தம் என தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார், தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 3,873 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 62 ஆயிரத்து 362 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: “தமிழக முதல்வருக்கும், எனக்கும் இருக்கிற தனிப்பட்ட குணம் என்னவென்றால் திராவிட இயக்க வரலாறு, கொள்கை, தத்துவத்தின்படி செயல்படுகிறோம். கோப்புகளை தயாரிக்கும்போதும், கையெழுத்திடும்போதும், நிதியை ஒதுக்கும்போதும் அதன்படி செயல்படுகிறோம். சுயமரியாதை, சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம், சமமான வாய்ப்பு, கல்வி மூலம் முன்னேற்றம், பொருளாதார நீதி என்ற அடிப்படையில் கோப்பை சரிபார்க்கிறோம்.
இதுவரைக்கும் 5 ஆயிரம் கோப்புகள் வந்திருக்கும். அதில் விளக்கம், திருத்தம் கேட்டும், வேறு காரணங்களுக்காகவும் திருப்பி அனுப்பியிருக்கிறேன். அந்தளவுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுப்பது முதலமைச்சர் மட்டுமே, இல்லையென்றால் இந்த மாதிரி ஒரு நிதியமைச்சர் செயல்பட முடியாது. எதற்காக நிதியமைச்சர் கோப்பை திருப்பி அனுப்புகிறார் என்று முதலமைச்சருக்கும் தெரியும். ஒரே காரணம்தான் ஒவ்வொரு திட்டமும் நமது கொள்கையை வளர்க்கிறது, கொள்கைக்கு ஏற்புடையது என்றால் உடனடியாக கையெழுத்திடுவேன். தெளிவில்லை, கணக்கு சரியில்லை என்றால் திருப்பி அனுப்பி விடுகிறேன்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்குரிய உதவித்தொகை உயர்த்தாமல் இருந்தது சமூக நீதிக்கு எதிரான செயல். கூடிய சீக்கிரம் இதனை மாற்றுவோம்.
சில ‘டேட்டாக்களை’ அடிப்படையாக வைத்து தவறு நடக்காமல் உண்மைப்பயனாளிகளுக்கு அரசு திட்டங்களை கொண்டுபோய் சேர்ப்பதை இலக்காக வைத்திருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தபோது அதிமுக கொண்டுவந்த விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டியிருந்தது. இந்த 2 திட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தவறு நடந்துள்ளது. இதையெல்லாம் திருத்துவது எங்களது கடமை. இதை திருத்தாவிட்டால் எங்களது அடிப்படைக் கொள்கைக்கே நாங்கள் துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம். ஏழை சாமானிய மக்களுக்கு போகவேண்டிய நிதியை திட்டமிட்டு நிதியை கொள்ளையடித்திருக்கிறார்கள். அதை நடக்கவிட்டால் சமூக நீதிக்கு துரோகம் செய்தவர்களாகிவிடுவோம்.
முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். உண்மையிலேயே ஏழையாக இருப்பவர்களை கண்டறிந்து கொண்டிருக்கிறோம். இது மனிதநேயமுள்ள ஆட்சி. முதலமைச்சரின் எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் படி நடக்கும் ஆட்சி. உறுதியாக எல்லா கோரிக்கைகளும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும். ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார்.
இவ்விழாவில் மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ மு.பூமிநாதன், துணை ஆணையர் கே.எம்.சி.லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.