அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 75 கி.மீ. ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் குறித்து எந்த விவரமும் உடனடியாக தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.