அப்பா, அம்மாவின் தீரா சண்டைகள், பெற்றோரையே பிரிந்துவிடும் முடிவில் நான்; சரியா? #PennDiary85

நான் 25 வயது வங்கி ஊழியர். அப்பா, அம்மாவுக்கு ஒரே பிள்ளை. எல்லார் வீடுகளிலும் பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம்தான். ஆனால், எங்கள் வீட்டில் பெற்றோர் சண்டை மட்டுமே போட்டுக்கொள்வதே என் பிரச்னை, சாபம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதுவரை 8, 10 முறை இருவரும் பிரிந்திருப்பார்கள். சில வருடங்கள், சில மாதங்கள் பிரிந்திருப்பார்கள். பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். பின்னர் மீண்டும் சண்டைபோட்டுக்கொள்வார்கள். இதனால் எப்போதுமே போர்க்களம் போலவே இருக்கும் வீட்டால், வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனக்கு.

Family (representational image)

அப்பா அவர் பெற்றோரிடமும், அவரின் சகோதர, சகோதரிகளிடமும் மிகவும் பாசமாக இருப்பதும், தன்னைவிட அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதுவும்தான் தன் கோபங்களுக்கு, சண்டைகளுக்கு, வெறுப்புக்கு, அழுகைகளுக்குக் காரணம் என்பார் அம்மா. அம்மா தன்னை மதிக்காததும், தன் பெற்றோர் வீட்டை மதிக்காததுமே அவரை பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்பார் அப்பா. இப்போது உங்களுக்கு, இதெல்லாம் வாழ்க்கையில் ஓர் அங்கம்தானே, அதற்காக 26 வருடங்களாக சண்டைபோட்டுக்கொண்டேவா இருப்பது என்று தோணுகிறது அல்லவா? உண்மை அதுதான். தீராத சண்டைகளுக்கு எல்லாம் பிரச்னைகள் காரணம் என்பதைவிட, சம்பந்தப்பட்ட இரு நபர்கள் காரணம் என்பதே உண்மை.

அப்பா, அம்மா… இருவருக்குமே துளிகூட விட்டுக்கொடுக்கும் குணம் இல்லை. பெருந்தன்மை என்றால் என்னவென்றே தெரியாது. எப்போதும் நீயா, நானா என்ற ஈகோவை தூக்கிக்கொண்டே அலைபவர்கள். அதனால்தான், எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாமல், தங்கள் குணத்தால் அதை இருவரும் இழித்துக்கொண்டும் பெரிதாக்கிக்கொண்டும் வருகிறார்கள்.

Couple’s quarrel

எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து, பெற்றோரின் சண்டையால் நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், மன அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. படிக்க, விளையாட, பிடித்ததை சாப்பிட, வேண்டுபவற்றை கேட்டுவாங்க என எல்லாருக்கும் கிடைத்த பால்யம் எனக்கு இல்லை. வீட்டில் எப்போதும் குக்கர் பிரஷர் போல ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அது எப்போது வெடிக்கும் என்றே தெரியாது. அவர்களது சண்டைகளில், ஒரு பெற்றோராக எனக்கான ஆசைகளை நிறைவேற்றுவது, என்னை மகிழ்வாக்கும் விஷயங்களை செய்வது போன்றவற்றுக்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இன்னொரு பக்கம், அவர்களது சண்டைகளால் தெருவில், உறவினர்களிடத்தில், பள்ளியில், காவல் நிலையம் வரை எல்லா இடங்களிலும் அவமானமாக உணர்ந்து நின்றிருக்கிறேன். எனவே, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைவிட, சண்டை இல்லாமல் நிம்மதியாக இருந்தாலே போதும் என்றே தோன்றும். இப்போதுவரை, வேண்டுவது அந்த நிம்மதியாக மட்டுமே இருக்கிறது. ஆனால், அது இன்னும் கிடைக்கவே இல்லை.

’இப்படி நீங்கள் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பதற்கு விவாகரத்து செய்துவிட்டு இருவருமே நிம்மதியாக இருங்கள், நானும் நிம்மதியாக இருப்பேன்’ என்று எத்தனையோ முறை சொல்லிப்பார்த்துவிட்டேன். ஆனால், அதற்கும் இருவரும் தயாராக இல்லை. அம்மா, அப்பா இருவருமே சம்பாதிப்பதால், ஒருவரை ஒருவர் எதற்காகவும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதே நேரம், நிரந்தரமாகப் பிரியவும் முடிவெடுப்பதில்லை. ஒரு பெரிய சண்டைக்குப் பின், அப்பா வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். பின்னர், பல மாதங்கள், வருடம் கழித்து கூட வருவார். மீண்டும் நாள்கள் உரசல்களுடன் ஆரம்பித்து, ஒரு நாள் எரிமலையாக வெடித்து, உடனே அப்பா வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் சில மாதங்கள் கழித்து திரும்பி என… இந்தக் கொடூரமான வாழ்க்கை சக்கரம்தான் எங்கள் வீட்டில் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

sad woman

நான் பணியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இப்போதும் இவர்கள் சண்டை தீர்ந்தபாடில்லை. எனக்கும் நிம்மதி கிடைத்தபாடில்லை. நான் இப்போது பெற்றோரை பிரிந்து செல்லும் முடிவுக்கு வந்துவிட்டேன். பிரிந்து என்றால், வெளியூருக்கோ, உள்ளூரிலேயே வேறு வீட்டுக்கு செல்வதோ அல்ல. நான் எங்கே இருக்கிறேன் என்றே அவர்களுக்குத் தெரிவிக்காமல், எங்காவது கண்காணாமல் சென்றுவிடுவது. 25 வயதாகும் என்னை, சுயசார்புடன் என்னால் பத்திரமாக பார்த்துக்கொள்ள முடியும். இவர்களுக்குப் பிள்ளையாக பிறந்த பாவத்துக்காக, இன்னும் இவர்கள் சண்டைகளிலும், பஞ்சாயத்துகளிலும் கிடந்து வேகாமல், பிரச்னைகள் இன்றி நிம்மதியாக விடியும் நாள்கள் வேண்டும் இனி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒரு பெற்றோராக தங்கள் கடமையை செய்யாமல், தங்கள் ஈகோவால் பிள்ளையின் வாழ்வையும் சேர்த்து நரகமாக்கிய அவர்களை நான் பிரிவது சரியான முடிவுதானே?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.