வாஷிங்டன்:அமைதியான போராட்டத்தில் தேவை இல்லாமல் படைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பல காயமடைந்தனர்.
இந்த நிலையில் போராடும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்தச் சூழலில் ஈரானுக்கு ஐ.நா. சபை ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தரப்பில், “அமைதியான போராட்டத்தில் இப்படி பாதுகாப்புப் படையினரை பயன்படுத்தி காயங்களையும், இறப்புகளையும் ஏற்படுத்தி இருப்பதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம். அமைதியான போராட்டத்திற்கு தேவையில்லாமல் பாதுகாப்புப் படை வீரர்களை பயன்படுத்துவதை தவிருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு காரணம்: ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம். இங்குள்ள சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.