நியூயார்க்-”அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக கூறும் ஒரு நாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது; மும்பையில் கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தராது,” என, பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில், இந்திய நிரந்தர துாதரகத்தின் முதல் செயலர் மிஜிதோ வினிதோ பதிலடி கொடுத்தார்.
ஐ.நா., பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர்ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:பாகிஸ்தான், இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புகிறது. எங்களிடம் ஆயுதங்கள் இருந்தாலும், நாங்கள் போரை விரும்பவில்லை. பேச்சுவார்த்தை வாயிலாகவே பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம்.
நடவடிக்கை
சுதந்திரத்துக்குப் பின், நாங்கள் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதனால், எங்கள் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை தான் அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அமைதி என்பது தான் எங்கள் நிலைப்பாடு என்பதை உலக நாடுகள் முன் உறுதியளிக்கிறேன். ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்தியா ஜம்மு – காஷ்மீரில் ராணுவ பலத்தை அதிகரித்துஉள்ளது. இதனால் அப்பகுதி முற்றிலும் ராணுவமயம் ஆக்கப்பட்ட மண்டலமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பேசிய ஐ.நா.,வின் இந்திய நிரந்தர துாதரகத்தின் முதல் செயலர் மிஜிதோ வினிதோ பேசியதாவது:அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், அமைதியை விரும்புவதாக கூறும் எந்த ஒரு நாடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது; மும்பையில் கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தராது. அந்நாடு அண்டை நாடுகளில் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிடுகிறது. அண்டை நாடுகளின் நிலத்துக்கு ஆசைப்படுகிறது. அமைதியை விரும்பும் ஒரு நாடு, அண்டை நாட்டின் ஒரு பகுதியை தன் நாட்டுடன் இணைக்க திட்டமிடாது. ஆனால் பாகிஸ்தான், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்து, அதை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியுள்ளது. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் அரசு ஆதரவுடன் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.
வருத்தம்
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அடிப்படை உரிமையைக் கூட தராமல் அவர்களை நசுக்குகிறது. ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, பாகிஸ்தான் உலக நாடுகளின் சபையில், இந்தியா மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement