அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு இதற்கு அதிகாரமில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோவிலை நிர்வகிக்கவும், பிற அறப்பணிகளை மேற்கொள்ளவும், ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் பொது அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

கோவிலை நிர்வகிப்பதால் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்து தக்காரை நியமித்து இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர், 2015இல் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் 2015இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை எனவும், இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிடப்பட்டது.

ஆனால், கோவிலுக்கு ஒன்பது மாதங்களில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் வருமானம் கிட்டிய நிலையில், வெறும் 43 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒப்படைக்கப்பட்டதாகவும், கோவில் வருமானம் அறக்கட்டளையின் பெயரில் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டதாகவும், இந்த முறைகேடுகள் காரணமாகவே அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு உதவி ஆணையருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டப்படி ஒரு அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, மனுதாரர் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரர் அறக்கட்டளை மத நிறுவனமா? இல்லையா? என விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் கண்டறிய வேண்டும் எனவும் அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.