தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கிய சம்பவங்கள் நடந்தேறின. மேலும், ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தையில் பேசுவது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களும் நடந்தன. அந்த வகையில், தற்போது உத்தரப் பிரதேசத்திலும் அதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் சீதாபூரில் 10ஆம் வகுப்பு மாணவன், மற்றொரு மாணவனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களின் ஆசிரியர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆசிரியர் கண்டித்ததால், 10ஆம் வகுப்பு மாணவர் மிகவும் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாளாக இருந்த மன உளச்சல் ஒரு கட்டத்தில் கோபமாக உருமாறியது. இதனால், நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்து அந்த ஆசிரியரை மூன்று முறை சுட்டுவிட்டு, அங்கிருந்து துப்பாக்கியுடன் தப்பிச்சென்றுள்ளான்.
ஆபத்தான இடங்களில் குண்டுகள் பாயாததால், அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. மேலும், அவரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆசிரியர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மாணவன் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பள்ளி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், துப்பாக்கியை வைத்திருக்கும் மாணவன் ஆசிரியரை துரத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரு கட்டத்தில், ஆசிரியர் அந்த துப்பாக்கியை மாணவனிடம் இருந்து பறிக்க முயன்றபோது தான், அந்த மாணவன் அவரை சுட்டதும் பதிவாகியிருக்கின்றன. மேலும், துப்பாக்கியின் பின்புறத்தை வைத்து ஆசிரியர் தாக்கியதும், ஆசிரியர் எதிர் தாக்குதல் புரிவதும் அதில் பதிவாகியுள்ளது.
மாணவன் சுட்ட சற்று நேரத்தில், அந்த ஆசிரியர் அப்படியே கீழே சரிந்துவிட்டார். அங்கிருந்தவர்கள் விரைந்து அந்த மாணவனை தடுத்தனர். மாணவனை இறுக்கமாக பிடித்திருந்தபோது, ஆசிரியர் மரத்தில் சாய்ந்திருந்தது வீடியோவில் தெரிந்தது. தான் கண்டித்ததால், அந்த மாணவன் மன வருதத்தில் இருந்தது தான் அறிந்திருக்கவில்லை என அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.