சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20-ம் தேதி வரை இரு வேளைகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள், இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும் விண்ணப்பித்தனர். மேலும், இந்த ஆண்டு டெட் தேர்வை இருகட்டங்களாக நடத்தவும் முடிவானது. அதன்படி முதல் தாளுக்கான தேர்வை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு (முதல் தாள்) அக்டோபர் 14 முதல் 20-ம் தேதி வரை இருவேளைகளில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதவிர தேர்வர்கள் பயிற்சி மாதிரித் தேர்வு எழுதவும் இணையதளத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வுகால அட்டவணை, ஹால்டிக்கெட் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.