சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 10-ம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி ‘யாதும் தமிழே’ கொண்டாட்டம் சென்னையில் செப்.25 (நாளை) கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய 5 ஆளுமைகளுக்கு தமிழ்த்திரு விருதுகள் வழங்கப்படுகின்றன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 2013 செப்.16-ம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழாவும் ‘யாதும் தமிழே’ விழாவும் நடைபெற்று வந்தன. ‘இந்து தமிழ் திசையின்’ பத்தாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழைப் போற்றும் ‘யாதும் தமிழே’ விழா மீண்டும் நடத்தப்படவுள்ளது. சென்னை சேப்பக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கில் (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) செப்.25 (நாளை) பிற்பகல் 3.30 மணிக்கு விழா நடைபெறுகிறது.
இதில் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகரும் சிந்து சமவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். நிகழ்வில் ‘தமிழை எதிர்காலத்துக்குக் கொண்டுபோய் சேர்ப்பது எப்படி?’ என்கிற தலைப்பில் எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆழி செந்தில்நாதன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, இயக்குநரும் பேச்சாளருமான கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துரையாடுகிறார்கள்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, ‘தமிழும் நானும்’ என்கிற தலைப்பில் பேசுவதுடன், தமிழ் ஹிப் ஹாப் பாடல்களையும் பாடுகிறார். தமிழ் மொழி சார்ந்தும் செயல்பட்டு வரும் அவர் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு குறித்து தயாரித்துள்ள ‘பொருநை’ ஆவணப் படத்தின் முன்னோட்டத்தை இந்த விழாவில் வெளியிடுகிறார்.
விழாவின் சிறப்பம்சமாக தங்கள் செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகத்தைச் செழுமைப்படுத்தி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆளுமைகள் ஐவருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. அந்த ஆளுமைகளின் விவரம் வருமாறு:
மார்க்சிய அறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான எஸ்.வி.ராஜதுரை, நிலவுரிமைப் போராளி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் சி.எம். முத்து, தொழிலாளர் நல செயற்பாட்டாளர் ஆர். கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.