தெஹ்ரான்: இப்படியெல்லாம் பண்ணா இப்படிதான் நடக்கும்னு சொல்லி, வன்முறை சம்பவத்தை வேடிக்கை பார்க்கிற ஆண்களுக்கு மத்தியில் துணிகர ஆண் ஒருவர் செய்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஈரானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி 22 வயது இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த அந்நாட்டு போலீஸின் அராஜக செயலை கண்டித்து தற்போது நாடு முழுவதும் போராட்டம் தீயாய் எரிந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் பெண்கள் பலர் தங்கள் ஹிஜாபை கழற்றி குப்பை தொட்டியில் வீசியும், தீயிட்டும் எரித்து வருகின்றனர்.
போராட்டம்
ஈரான் பெண்களின் இந்த போராட்டம் உலகம் முழுவதும் தற்போது பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த போராட்டம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்தியாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாபை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த போராட்டத்தின் நோக்கம் வேறு. எல்லா மத பழக்கங்களும் பின்பற்றப்படும் கல்வி நிலையங்களில் ஏன் இஸ்லாம் மத பழக்க வழக்கங்கள் பின்பற்ற தடை விதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த போராட்டத்தின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.
பழமைவாதிகள்
இந்த சூழில் ஈரானில் போராடி வரும் பெண்களுக்கு ஆதரவாக அந்நாட்டு ஆண்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பெரும்பாலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் இது போன்ற போராட்டத்தில் ஆண்கள் ஆதரவளிப்பது என்பது அரிதாகவே இருக்கும். இந்த போராட்டங்களில் பெண்கள் மீது தாக்குதல் நடந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் ஒரே அட்வைஸ் மழையாக இருக்கும். இந்த சமயத்தில் ஆண்கள்/பெண்கள் கீழ்க்கண்ட வரிகளை நிச்சயம் சொல்வார்கள். “not all men தோழி அவன் வேணும்னா உன்னை அடிக்கலாம் ஆனா நான் அப்படி இல்ல’ன்னு” சில ஆண்கள் கூறுவார்கள்.
குற்றச்சாட்டு
அதேபோல, “முடி தெரிஞ்சா இப்படி அடிக்க தான் செய்வாங்க நீ ஒழுங்கா புர்கா போடணும்”, “இப்படி மோசமான ஆண்கள் எல்லாம் உலகத்துல இருக்காங்க தோழி அதனால ஒழுங்கா புர்கா போடுங்க”, “நீ ஒழுங்கா dress பண்ண கூடாதுன்னு decide பண்ணிட்டா அதற்குரிய விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்”, “இப்படியெல்லாம் ரோட்ல நின்னு கத்தினா இதுதான் கதி” என்றும் கூறுவார்கள். சிலர் வேறு மாதிரியாக, “இந்த வந்துட்டான்ப்பா any help Shalini group” அப்படினு உதவிக்கு வருபவர்களையும் மட்டம் தட்டுவார்கள். இவர்கள் எல்லோருமே பழமைவாதிகள்தான்.
உதவி
ஆனால் இதையெல்லாம் உடைத்து நிச்சயம் உதவிக்கு வருவார். அது போன்ற சம்பவம்தான் ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் அரங்கேறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் பெப்பர் ஸ்பிரே கொண்டு தாக்குகிறார். இதில் அப்பெண் நிலைகுலைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த மர்மநபர், பைக்கில் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றுள்ளார். ஆனால் உடனடியாக அங்கு வந்த மற்றொரு ஆண், அந்த மர்ம நபர் மீது தாக்குதலை தொடங்கியுள்ளார்.
பின்னர் போராடிக்கொண்டிருந்த பெண்கள், தாக்குதலுக்குள்ளான பெண் என அனைவரும் மர்ம நபரை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.