இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு) மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (22) பி.ப 12.30 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

1982ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தின் ஊடாக சட்டத்தின் மூன்றாவது பிரிவு திருத்தப்படுகிறது. இதன் ஊடாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உள்ளடக்கம் (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) மாற்றப்படுகிறது.

இதன்படி கூட்டுத்தாபனத்தின் எண்ணிக்கை (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) 07 இல் இருந்து 09 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதில் நிதி அமைச்சரினால் குறித்த அமைச்சின் பிரதிநிதி ஒருவரை பணிப்பாளர் சபையின் உறுப்பினராக நியமிப்பதற்கும் இதன் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சின் செயலாளர் அல்லது அவரினால் பெயரிடப்படும் அமைச்சின் மேலதிக செயலாளர் பதவி நிலைக்குக் குறையாத பதவியில் உள்ள அதிகாரி ஒருவரை பணிப்பாளர் குழுவின் உறுப்பினராக நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நியமனங்களுக்கு அப்பால் ஏனைய உறுப்பினர்கள் வழமைபோன்று நியமிக்கப்படுவார்கள்.

குறித்த சட்டமூலம் குறித்த இணைப்பு கீழ்வருமாறு

http://documents.gov.lk/files/bill/2022/8/241-2022_T.pdf

இதேவேளை, 2010ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு யூலை 03ஆம் திகதிய 2078/22ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட சிவில் விமான சேவைகள் (ஊழியர் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும்) ஒழுங்குவிதிகளில் காணப்படும் அச்சுப் பிழையை சரி செய்வது இதன் நோக்கமாகும்.

இது தொடர்பான வர்த்தமானி பத்திரிகைக்கான இணைப்பு கீழ்வருமாறு

http://documents.gov.lk/files/egz/2022/6/2283-05_T.pdf

பாராளுமன்றம் இன்று மு.ப 9.30 மணிக்குக் கூடியதுடன், மு.ப 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மொழி மூலமான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது.  நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ், எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான கதிர்வீச்சு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகளினால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது குறித்துக் கேள்வியெழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 12.30 வரை இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

பி.ப 1.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை திருத்துவது தொடர்பான விதப்புரைகள் விவாதத்துக்கு எடுக்கப்பட்டதுடன், இவ்விடயம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் பி.ப 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. இதன்போது இலங்கையின் விளையாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சு லலித் வர்ணகுமார விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரன் அவர்களினால் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.