கீவ்,
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதல் ரஷியா போர் தொடுத்து வருகிறது.தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷிய படைகள் கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் மீது கவனம் செலுத்த தொடங்கின. இதன் மூலம் கிழக்கு, தெற்கு உக்ரைனில் உள்ள பல பகுதிகள் ரஷிய வசம் வந்தன.
இந்த நிலையில் ஏற்கனவே ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நேற்று தொடங்கியது.
இந்த வாக்கெடுப்பில் அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பிராந்தியங்கள் ரஷியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என்பது பற்றிய தங்களின் விருப்பதை தெரியப்படுத்துவர்.
எனினும் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடப்பதால் முடிவுகள் ரஷியாவுக்கு சாதகமாகவே அமையும் என கூறப்படுகிறது.
இதனிடையே வருகிற 27-ந் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை வீடு வீடாக எடுத்து சென்று, வாக்கு பதிவு செய்வதாகவும், இறுதி நாளான 27-ந் தேதி மட்டும் மக்கள் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களில் இருந்து ரஷியாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக ரஷியாவிலும் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.